Published : 28 Dec 2021 06:38 AM
Last Updated : 28 Dec 2021 06:38 AM

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே தொழிலதிபர் வீட்டில் 750 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் திருட்டு நடந்த ஜகுபர் சாதிக் வீடு. (அடுத்த படம்) வீட்டில் சிதறிக்கிடக்கும் பொருட்கள்.

புதுக்கோட்டை: மீமிசல் அருகே தொழிலதிபர் வீட்டில் 750 பவுன் நகைகள் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினத்தைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (50). இவர், புரூணை நாட்டில் 7 இடங்களில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். குடும்பத்தினருடன் அங்கேயே தங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு தொழில் செய்து வரும் ஜகுபர் சாதிக், 3 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் ஊருக்கு வரவில்லை. பள்ளிவாசல் கட்டுதல் போன்ற இறை பணிக்கும், இயலா நிலையில் உதவி கேட்டு வருவோருக்கும் ஜகுபர் சாதிக் நிறைய உதவி செய்துவந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜகுபர் சாதிக் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது நேற்று தெரியவந்தது. அதே பகுதியில் வசிக்கும் அவரது சகோதரி சாதிக்பீவி விரைந்து வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, கீழ்தளத்தில் உள்ள ஒரு அறை கதவின் பூட்டும், மேல் தளத்தில் உள்ள ஒரு அறை கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த அறைகளில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாதிக்பீவி, புரூணையில் உள்ள தனது சகோதரர் ஜகுபர் சாதிக்குக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போதுதான், மேல்தளத்தில் உள்ள அறையில், ஒரு அட்டைப் பெட்டிக்குள் வளையல், சங்கிலி, காசு உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 750 பவுன் நகைகளை வைத்து, துணிகளை போட்டு மூடி வைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். அந்த நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், தடயங்களை மறைப்பதற்காக வீட்டின் உள் மற்றும் வெளிப் பகுதியில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக மீமிசல் காவல் நிலையத்தில் சாதிக்பீவி புகார் அளித்துள்ளார். இதையடுத்து கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் இருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். அத்துடன், மோப்ப நாய் கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொள்ளை நடந்த வீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார். அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினார். இந்த வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் டவரில் பதிவாகியுள்ள அழைப்புகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x