Published : 27 Dec 2021 08:41 AM
Last Updated : 27 Dec 2021 08:41 AM
பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ரயில்வேஊழியரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கொளத்தூர் - மாதவன் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(67). ரயில்வே துறையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ராமமூர்த்தியை தொடர்பு கொண்ட திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்கிற முருகன்(40), பெருமாள்பட்டு ஏ.கே.என். அவென்யூவில் தனக்கு சொந்தமாக 2,400 சதுர அடி மனை விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே, ராமமூர்த்தி, சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று மனையை பார்த்து விட்டு, முன் தொகையாக ரூ.25 ஆயிரத்தை முருகனிடம் அளித்து, காலி மனையின் பத்திரத்தின் நகலை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இரு நாட்கள் கழித்து மீண்டும் ராமமூர்த்தியை தொடர்பு கொண்ட முருகன், அவசரமாக ரூ.5 லட்சம் பணம் தேவைப்படுவதால், பணத்தை கொடுத்து விட்டு, வீட்டுமனை பத்திரம் மற்றும் பட்டாக்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ராமமூர்த்தி கடந்த 11-ம் தேதி இரவு 7 மணியளவில் ரூ.5 லட்சத்துடன் தன் காரில் பூந்தமல்லியில் உள்ள வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை அருகே சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முருகனின் நண்பரான செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ்(26), ராமமூர்த்தியின் காரில் ஏறி, குன்றத்தூர் அருகே மலையம்பாக்கம் குமரன் நகர் பகுதியில் உள்ள முருகனின் வாடகை வீட்டுக்கு ராமமூர்த்தியை கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு, முருகன், சுபாஷ், முருகனின் உறவினரான வேப்பம்பட்டைச் சேர்ந்த கந்தா(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து, ராமமூர்த்தியைத் தாக்கி வீட்டில் அடைத்து வைத்து ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு மறுநாள் காலை வெளியே விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அவ்விசாரணையின் அடிப்படையில், முருகன், சுபாஷ், கந்தா ஆகிய 3 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில், முருகன் மீது செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT