Published : 26 Dec 2021 08:43 AM
Last Updated : 26 Dec 2021 08:43 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஷோபனா. இவரது கணவர் கோவிந்தராஜ் (38). வீரவர் கோயில் பகுதியில் டி.வி பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 22-ம் கடையில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான வெங்கடேசன் (27) என்பவர் கொலை செய்துவிட்டு தப்பினார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த தப்பிஓடிய வெங்கடேசனை தேடி வந்தனர். இதற்காக, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வெங்கடேசன் ஏற்கெனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். தற்போது, மாநிலம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளை ஒடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பழைய கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அதன்படி, வெங்கடேசனை காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது, தான் திருந்தி வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், தான் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக கோவிந்தராஜ் அவதூறு தகவல் பரப்பி வந்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார்’’ என தெரிவித்தனர்.
இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜியின் மனைவி ஷோபனா மற்றும் உறவினர்கள் நேற்று கிராமிய காவல் நிலையம் முன்பாக திரண்டு வெங்கடேசனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT