Published : 20 Dec 2021 07:41 AM
Last Updated : 20 Dec 2021 07:41 AM
வேலூர்: கர்நாடகா போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார்.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியா என்பவர் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்தார். இவர் மாது, நேத்திரா, விண்டு என பல பெயர்களில் மாவோயிஸ்டாக இருந்து வந்தார்.
2006 முதல் பிரபா தலைமறைவாக இருந்த வந்தார். இவர், கர்நாடக மாநிலம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். இவர் மீது கர்நாடக மாநிலம் சிமோகா, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடக அரசு இவரது தலைக்கு ரூ.5 லட்சம் வரை சன்மானம் அறிவித்தது.
கணவர் பிடிபட்டார்
இவரது கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும், அந்த இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி சிறப்பு மண்டல குழு பொறுப்பாளராகவும் இருந்தபோது, நவ.9-ல் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தலைக்கு ரூ.5 லட்சம்
அவர் மீது கர்நாடகாவில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.அவரது தலைக்கும் அம்மாநில அரசு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து வெளியேறி அமைதியான வாழ்வை சமுதாயத்துடன் இணைந்து வாழ விருப்பப்பட்ட பெண் மாவோயிஸ்ட் பிரபா திருப்பத்தூர் க்யூ பிரிவு மூலம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்துள்ளார்” என்றார்.
தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு இயல்பு வாழ்க்கை வாழ விரும்பும் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு தேவையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் தமிழக அரசு சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, சரணடையும் மாவோயிஸ்ட் உறுப்பினர்களுக்கு அவர்களின் வகித்த பொறுப்புகளின் அடிப்படையில் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை மறுவாழ்வு நிதிவழங்க மாதந்தோறும் ரூ.4 ஆயிரம்3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழகஅரசு ஆணை பிறப்பித்து அதை செயல்படுத்தியும் வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT