Published : 16 Dec 2021 03:06 AM
Last Updated : 16 Dec 2021 03:06 AM
வேலூர்: வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 16 கிலோ நகைகளை திருடிச் சென்றனர்.
வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி சாலையில், கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல நகைக் கடையின் கிளை அமைந்துள்ளது. இந்த நகைக் கடையில் 30-க்கும்மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம்இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை ஊழியர்கள் வழக்கம்போல் பூட்டிச் சென்றனர். நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. தங்கம் மற்றும் வைர நகைகள்இருந்த பகுதிகளில் 16 கிலோ நகைகள் திருடு போனது தெரியவந்தது. கடையின் மேல் தளத்தில் உள்ள சுவரில் துளை போடப்பட்டு, மேல்தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு நடுவே உள்ள சிமென்ட் தளத்தை (சீலிங் சிலாப்) உடைத்து உள்ளே புகுந்தமர்ம நபர்கள் கைவரிசை காட்டிஉள்ளனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடையின் உள்ளே அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, மோப்ப நாய் சிம்பா அங்கு வரவழைக்கப்பட்டது. கடையின் உள்ளே சென்று மோப்ப நாய் சிம்பா சிறிது நேரத்தில் வெளியே வந்து, கடையில் இருந்து காட்பாடி சாலைக்கு ஓடி சிறிது தூரத்தில் நின்றது. பிறகு, அங்கிருந்து ஓடி வந்து கடையின் அருகே உள்ள காலி மனைக்கு ஓடிச்சென்று கடையின் பின்பக்க சுவரின் அருகே நின்றது. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.
அதில், வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழையும் ஒரு நபர் கண்காணிப்பு கேமரா மீது ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு அந்த கண்காணிப்பு கேமராவில் எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை. அதேபோல, அங்குள்ள மேலும் சில கேமராக்கள் மீது கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்து அவற்றை செயல்இழக்க செய்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், 16 கிலோ தங்க நகைகள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு கூறும்போது, ‘‘வேலூர் மாநகர் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி, கொணவட்டம் பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேலூரைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாரெல்லாம் தங்கியிருந்தனர். இன்று (நேற்று) விடுதியை காலி செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை பாதிக்கும் என்பதால் இதுகுறித்து மேலும் எதுவும் கூற முடியாது” என்றார்.
வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறும்போது, "கொள்ளையர்கள் யார் என்பது ஓரளவுக்கு அடையாளம் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பட்டியலை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம். தனிப்படை நடத்திய விசாரணையில் ஒரு துப்பு கிடைத்துள்ளது. விரைவில் நகைக்கடை திருட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
நகைக்கடை ஊழியர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம். திருட்டு நடந்த கடையில் உள்ளே மட்டும் சிசிடிவி உள்ளது. வெளிப்பக்கம் இல்லை. இது விசாரணையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT