Published : 26 Oct 2021 05:49 PM
Last Updated : 26 Oct 2021 05:49 PM
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர், தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணி மீது புகார் அளித்துள்ளார். அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி மணி ரூ.17 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தமிழ்ச்செல்வன் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். புகார் மனுவுடன் பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகலை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தமிழ்ச்செல்வன் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக வேலை வாங்கிக் கொடுக்க வேண்டி மணியை அணுகியுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முக்கிய அதிகாரிகளைத் தனக்குத் தெரியும் என மணி கூறியதை நம்பி, தமிழ்ச்செல்வன் ரூ.17 லட்சம் ரூபாயை செல்வகுமார் என்பவர் மூலமாக மணிக்குக் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணி மற்றும் செல்வகுமார் பணம் வாங்கி மோசடி செய்ததாக 120 (1), பி, 420 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள செல்வகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக மணி மீது ஏற்கெனவே பலரும் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT