Published : 04 Oct 2021 04:21 PM
Last Updated : 04 Oct 2021 04:21 PM
செலுத்தும் பணத்துக்கு 24 சதவீதம் வட்டியுடன், கணினி சார்ந்த பணி வழங்கப்படும் என்று கூறி, ரூ.4.73 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு அன்னை இன்போடெக், அன்னை லைஃப் புரமோட்டர்ஸ், அன்னை டிரேடிங் மார்க்கெட்டர்ஸ், அன்னை ஹெல்த் அஃப்லூயன்ஸ், அன்னை வெல்த் ரிசோர்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்லமுத்து (50), அவரது மனைவி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் இணைந்து தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் செலுத்தும் பணத்துக்கு 24 சதவீதம் வட்டியுடன், கணினி சார்ந்த பணியும் வழங்கப்படும் என்று கூறி அன்னை இன்ஃபோடெக் என்ற நிறுவனம் பெயரில், கடந்த 2009-ல் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி, நாமக்கல், ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், விளம்பரப்படுத்தியதைப் போல உரிய வட்டி, அசல் தொகையைத் திருப்பி அளிக்கவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு என்பவர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த 8 நிறுவனங்களும் மோசடியில் ஈடுபட்டதும், 118 முதலீட்டாளர்களிடம் ரூ.4.73 கோடி மோசடி செய்ததும் தெரியவந்தது. 2010-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று தீர்ப்பளித்தார். அதில், "நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்ட செல்லமுத்துவின் மனைவி உட்பட மேலும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT