Published : 20 Aug 2021 04:33 PM
Last Updated : 20 Aug 2021 04:33 PM
கிண்டி பகுதியில் வீட்டின் முன்பு குதிரைப் பந்தயம் தொடர்பாகப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.6,500 பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களையும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரையும் கண்காணித்துக் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், அந்தந்தக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு நேற்று (19.08.2021) மாலை சுமார் 4 மணியளவில் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கிண்டி, மடுவாங்கரை, சாத்தானிபேட்டை, எண்.23/5 என்ற முகவரியில் உள்ள வீட்டின் முன்பு கண்காணித்தபோது, அங்கு சிலர் குதிரைப் பந்தயம் தொடர்பாகப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது
அதன் பேரில் மேற்படி வீட்டின் முன்பு அனுமதியில்லாமல் குதிரைப் பந்தயம் தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.விநாயகமூர்த்தி (45), 2.முருகன், (36), 3.கனகராஜ், (37), 4.ஜெயசீலன் (58), 5.ஆறுமுகம் (56), 6.வெங்கடேசன் (49) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய பணம் ரூ.6,500 பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT