Published : 30 Jul 2021 03:39 PM
Last Updated : 30 Jul 2021 03:39 PM
தூத்துக்குடியில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் வீட்டில் பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (56). இவர், தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கல்யாணசுந்தரம் கடந்த 25-ம் தேதி மனைவியுடன் சென்னைக்கு மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மனைவியை அங்கேயே விட்டுவிட்டு கல்யாணசுந்தரம் மட்டும் இன்று காலை தூத்துக்குடிக்கு திரும்பி வந்துள்ளார். வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும், வீட்டின் அனைத்து அறைகளில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் மானிட்டரையும் தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் கொள்ளையர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT