Published : 09 Jul 2021 04:55 PM
Last Updated : 09 Jul 2021 04:55 PM
ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற காவலரைப் பாராட்டி அதை ஊக்கப்படுத்தும் வகையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, காவலரின் பெற்றோரை அழைத்து உதவி வழங்கி வாழ்த்தினார்.
இதுகுறித்து தமிழக காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“ராமநாதபுர மாவட்டம், கமுதி தாலுக்காவில் உள்ள சிங்கபுலியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாகநாதன் பாண்டி, தமிழகக் காவல்துறையில் இணைந்து தற்போது சென்னை மாநகரக் காவல் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர் அனைத்து இந்தியக் காவல்துறை விளையாட்டுப் போட்டியில் 4/400 பிரிவில் தடகளப் பந்தயத்தில் முதலிடம், மாநில அளவில் 46.61 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், கிரான்ஃபிக்ஸ் (Granfix) போட்டிகளில் 47.00 நொடிகளில் தங்கப் பதக்கமும், ஃபெடரேஷன் (Federation) கோப்பையில் 46.09 நொடிகளில் வெள்ளிப் பதக்கமும், தமிழக முதல்வர் தடகளப் போட்டியில் 47.00 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.
இந்தியா சார்பில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் நாகநாதன் பாண்டியின் தந்தை பாண்டி, தாய் பஞ்சவர்ணம் இருவரையும் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் காவல்துறையின் சார்பில் சிறப்பு உதவிகளையும் வழங்கினார்.
சுமார் 41 வருடங்கள் கழித்து தமிழ்நாடு காவல்துறையில் இருந்து தடகள வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் P. சுப்ரமணியன் என்பவர் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது”.
இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT