Published : 22 Jun 2021 04:12 PM
Last Updated : 22 Jun 2021 04:12 PM
தமிழகம் முழுவம் எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூன் 22) செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
" எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் தமிழகம் முழுவதிலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர் இதனை செய்ததற்கு வாய்ப்பிருக்கிறது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் விசாரித்து வருகிறோம்.
இது தொடர்பாக, எத்தனை புகார்கள் உண்மையான புகார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்.
பணம் எடுக்கும் மற்றும் டெபாசிட் செய்யும் வசதி கொண்ட இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திருட்டு நடப்பது தமிழகத்தில் முதன்முறை.
தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 48 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தமாக உள்ள 18 புகார்களில் 7 புகார்களில் மட்டுமே குறைந்த தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எந்த இழப்பும் இல்லை. வங்கிக்குத்தான் இழப்பு.
தொழில்நுட்ப குறைபாட்டினால் தான் இது நடந்துள்ளது. ஆனால், இப்போது அந்த குறைபாட்டை சரிசெய்துள்ளனர். இனி இதுபோன்று செய்ய முடியாது.
3, 4 பேர் தான் இதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என தெரிகிறது. எல்லா புகார்களிலும் சிசிடிவி இருக்கிறது. எஸ்பிஐ வங்கியில் மட்டும்தான் நடைபெற்றுள்ளது. வேறு வங்கியிலும் நடைபெற்றுள்ளதா என கடிதம் மூலம் கேட்போம். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இது குறித்து விசாரிக்க, ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் சில மாநிலங்களிலும் இதேபோன்று நிகழ்ந்துள்ளது. சம்மந்தப்பட்ட ஏடிஎம்களில் இனி பணம் எடுக்க முடியாது. பணம் டெபாசிட் செய்யலாம்.
சென்னையில் பல ஏடிஎம்களில் இவ்வாறு நடைபெற்றுள்ளது. மற்ற மாவட்டங்கள் குறித்து விசாரித்து வருகிறோம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கொள்ளையர்கள் ஹரியாணாவுக்கு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தனிப்படையினர் ஹரியாணா விரைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT