Published : 20 Jun 2021 12:34 PM
Last Updated : 20 Jun 2021 12:34 PM
துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு முன் ஜாமீன் வழங்க சாந்தினி மற்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 16 அன்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, மணிகண்டனை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர். மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் மதுரை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் தீவிரமாக தேடினர்.
மேலும், அவர் அமைச்சராக இருந்தபோது அவருடைய உதவியாளர், ஓட்டுநர், பாதுகாப்பு அளித்த காவலர் என மூன்று பேருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மணிகண்டனை காவல் துறையினர் இன்று (ஜூன் 20) கைது செய்தனர். அவர் பெங்களூருவில் தலைமறைவாக இருந்ததாகவும், அங்கு வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மணிகண்டனை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT