Published : 16 Jun 2021 02:56 PM
Last Updated : 16 Jun 2021 02:56 PM
மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை மாவட்ட எஸ்.பி. உதவியுடன் துணிச்சலாக நிறுத்திய நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை பாண்டியகோயில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பெற்றோர் திருமணம் செய்துவைப்பதிலேயே உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் சிறுமி எப்படியோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனின் தொடர்பு எண்ணைப் பெற்றிருக்கிறார். அந்த எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தான் படிக்கவேண்டும் ஆகையால் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணத்தை உடனடியாக நிறுத்துமாறு வேண்டியுள்ளார்.
மாவட்ட எஸ்.பி.யும் புகாரின் முக்கியத்துவத்தை அறிந்து உடனடியாக அதனை மாநகர காவல் சரகத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளார்.
அண்ணாநகர் போலீஸாரும் உடனடியாக செயல்பட்டு, சிறுமியையும் அவரது பெற்றோரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். காவல்நிலையத்தில் பெற்றோரைக் கண்டித்ததோடு சிறுமியின் விருப்பத்தைக் கேட்டுள்ளனர். சிறுமி தான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் மாறாக கருப்பாயூரணி பகுதியிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
போலீஸாரும் சிறுமியை அவரது பாட்டி வீட்டில் இருக்க அனுமதித்தனர். இந்நிலையில், அச்சிறுமி இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தனது திருமணத்தை நிறுத்த எஸ்.பி.யின் துணையை நாடி துணிச்சலாக செயல்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவும் குழந்தைத் திருமணங்களும்..
கரோனா காலத்தில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சிஆர்ஒய் (CRY) நடத்திய ஆய்வின்படி 2020-ம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. அம்மாதத்தில் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT