Published : 18 May 2021 05:17 PM
Last Updated : 18 May 2021 05:17 PM
தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளில் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2 நாட்களாக நடத்திய ரெய்டில் 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயம், 2,300 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் அழித்தனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மதுப்பிரியர்களின் தேவையைப் போக்க, ஆந்திர மாநிலத்தில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்டு, பாக்கெட்டுகளில் நிரப்பி ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாருக்குப் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் துறையினர், கடந்த 10 நாட்களாகத் தொடர் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக நடத்திய சாராய வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா பகுதியில், சாராயம் காய்ச்சி வாணியம்பாடி பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, வாணியம்பாடி மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில், உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் 10 போலீஸார் அடங்கிய குழுவினர், மாதகடப்பா பகுதியில் கடந்த 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் சாராயம் காய்ச்சத் தயாராக வைக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் கைப்பற்றி அதை அங்கேயே கொட்டி அழித்தனர். இதையடுத்து, சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த பாலன் என்பவரைப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடினார்.
இதையடுத்து, வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம், தும்பேரி, கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில், உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில், பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த மல்லிகா (36), அம்பிகா (34), கோவிந்தம்மாள் (53), ஆஞ்சியம்மாள் (56), செல்வி (32), வேலு (37), பார்த்தீபன் (34) ஆகிய 7 பேரைக் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரேயுள்ள புது ஓட்டல் தெருவில் பாக்கெட் சாராயம் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார், அங்கு சென்று சோதனையிட்டபோது ஓம் சக்தி கோயில் தெருவைச் சேர்ந்த விக்டர் (30) மற்றும் விஜயகுமார் (42) ஆகிய 2 பேரும் பாக்கெட் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் 2 பேரிடம் இருந்து 224 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் கள்ளச்சாராய விற்பனை பல இடங்களில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து காவல் துறையினர் தீவிர சாராய வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT