Published : 17 May 2021 02:33 PM
Last Updated : 17 May 2021 02:33 PM
தஞ்சாவூர் அருகே ராணுவ வீரர்கள் வீட்டில் 40 பவுன் நகை, 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடிய வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன். இவர்களுடைய மகன்கள் கபாலீஸ்வரன் (35), பிரகதீஸ்வரன் (32) இருவருக்கும் திருமணமாகிக் குழந்தைகள் உள்ளனர்.
கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். விடுமுறை காரணமாகத் தற்போது ஊர் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு குண்டூரில் உள்ள தங்களது வீட்டில் மின்சாரம் இல்லாததால் பக்கத்துத் தெருவில் உள்ள தங்களுடைய மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் இரவு தங்கினர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர் .
இது தொடர்பாக மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், திருடர்களைத் தீவிரமாகத் தேடி வந்தநிலையில் கடந்த 16ஆம் தேதி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ராஜபாண்டி மகன்கள் ராஜ் (24), சக்திவேல் (28), சிவா (27), கணேசன் மகன்கள் முருகன் (45), மாரியப்பன் (46 ) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் தஞ்சாவூர் மாவட்டம் குண்டூரில் உள்ள ராணுவ வீரர்கள் வீட்டில் நகை, பணத்தைத் திருடியவர்கள் என்று விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர்.
திருட்டு வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தனிப்படை போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT