Published : 21 Apr 2021 09:28 AM
Last Updated : 21 Apr 2021 09:28 AM
காட்பாடி அருகே லத்தேரியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த லத்தேரியில் மோகன் (55) என்பவரது பட்டாசுக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கடையின் உரிமையாளர் மோகன் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் தேஜஸ் (8), தனுஜ்மோகன்(6) ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பட்டாசுg கடை தீ விபத்தில் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அனைத்து வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைகள் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பட்டாசுக் கடைகளில் உரிமையாளர், பணியாளர்களைத் தவிர குழந்தைகள் மற்றும் உறவினர்கள் யாரும் கடைக்குள் அனுமதி அளிக்கக்கூடாது, அனைத்து பட்டாசுக் கடைகளிலும் தீ பாதுகாப்பு விதிமுறைகளும், உரிமம் சார்ந்த நிபந்தனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், இருப்பில் இருக்கும் பட்டாசுகளில் அதிகமான சேதத்தை ஏற்படுத்தக் கூடிய பட்டாசு வகைகளைக் கடையில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும், மே மாதம் இறுதி வரை கடைகளில் அதிக பட்டாசுக்களை இருப்பு வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தாய் தற்கொலை:
இந்நிலையில், பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி (34) இன்று அதிகாலை லத்தேரி ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த வித்யாலட்சுமி கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய வித்யாலட்சுமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வித்யாலட்சுமியின் தற்கொலை லத்தேரி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT