Published : 11 Apr 2021 04:56 PM
Last Updated : 11 Apr 2021 04:56 PM
சென்னை கொளத்தூரில் ஒருவாரம் முன்பு சாலையில் விழுந்து இறந்து கிடந்த நபர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பைக்கில் லிப்டு கொடுத்து அழைத்து வந்த இளைஞர் பணம் கேட்டு தராததால் தாக்கி கொன்றது தெரியவந்தது.
கடந்த 04.4.2021 அன்று அதிகாலை சுமார் 04.00 மணியளவில், கொளத்தூர், வளர்மதி நகர், முதலாவது பிரதான சாலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில்,கொளத்தூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபர் பின்னந்தலையில் ரத்தக்காயத்துடன் உயிரிழந்திருந்ததால் அவர் மீது ஏதாவது வாகனம் மோதி உயிரிழந்தாரா? அல்லது யாராவது தாக்கினார்களா? அல்லது அவரே தானாக கீழே விழுந்ததால் இறந்துவிட்டாரா? என சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இறந்துபோன நபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (47) கொளத்தூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நள்ளிரவு கொளத்தூர் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது
சங்கர் உயிரிழந்து கிடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். ஏப்.04 அன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தப்படி சங்கர் வருவதும், பின்னர் அவர் உயிரிழந்து கிடந்த இடத்தருகே மோட்டார் சைக்கிள் நிற்பதும், சங்கரும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் இறங்கி பேசுவதும், வாக்குவாதம் நடப்பதும் பதிவாகியிருந்தது.
பின்னர் பைக்கை ஓட்டி வந்த நபர் சங்கர் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளுவதும், ஓங்கி குத்துவதும், அதன் காரணமாக சங்கர் வேரறுந்த மரம் போல் கீழே விழுவதும் பதிவாகியிருந்தது. சங்கர் கீழே விழுந்ததைப்பார்த்த மோட்டார் பைக்கை ஓட்டி வந்த நபர் மோட்டார் சைக்கிளை ஸ்டர்ட் செய்வதும், கிளம்பும் முன் கீழே விழுந்துக் கிடக்கும் நபரைப் பார்த்து பின்னர் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு கீழே கிடக்கும் நபரை குனிந்து பார்ப்பதும், பின்னர் பைக்கை ஸ்டார்ட் செய்வதும் பின்னர் மீண்டும் கீழே இறங்கி வந்து சங்கர் பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்துக்கொண்டு வேகமாக பைக்கில் ஏறிச் செல்வதும் பதிவாகியிருந்தது.
மோட்டார் பைக்கை ஓட்டி வந்த நபர் தாக்கியதில் மயக்கமாகி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. கொளத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சிசிடிவி பதிவுகளில் இருந்த இருசக்கர வாகனத்தின் அடையாளத்தைக் கொண்டும், அப்பகுதியில் பொருத்தியிருந்த சுமார் 45 சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அது கொளத்தூர் அன்னை சத்யா நகர், பகுதியை சேர்ந்த சசிக்குமார் (19) என்பது தெரியவந்தது.
அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், கடந்த 4-ம் தேதி மது அருந்தி விட்டு நள்ளிரவு 2-30 மணி அளவில் தனது இரு சக்கர வாகனத்தில் ரெட்டேரி வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த சங்கர் லிப்ட் கேட்டுள்ளார், அவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடமான வளர்மதி நகருக்கு வந்த நிலையில் “பெட்ரோல் போட பணம் வேண்டும் 100 ரூபாய் கொடு” என தான் கேட்டதாகவும், “என்னப்பா நல்லவன் மாதிரி லிப்டு கொடுத்துட்டு இப்ப பணம் கேட்கிறாய்” என்று சங்கர் கோபமாக கேட்டதாகவும், “உனக்கு லிப்டு கொடுக்கத்தான் நான் இருக்கேனா? லிப்டு கொடுத்தால் பெட்ரோல் யார் போடுவார்கள்?” என்று கேட்டதாகவும், இதனால் கோபமடைந்த சங்கர் “வண்டியை நிறுத்து நான் நடந்தே போய்க்கொள்கிறேன்” என்றுக் கூற தான் வண்டியை நிறுத்தி இறக்கி விட்டதாகவும் சசிகுமார் கூறியுள்ளார்.
அதன் பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்த நிலையில் தான் தாக்கியதில் கீழே விழுந்து சங்கர் மயக்கமாகிவிட்டார், எழுப்பி பார்த்து எழுந்திருக்காததால் அவர் பாக்கெட்டிலிருந்து ரூ.1000-ஐ எடுத்துக்கொண்டு தான் போய் விட்டதாகவும், மயக்கமாக கிடப்பார் அப்புறம் எழுந்து போயிருப்பார் என்றுதான் நினைத்ததாகவும் சசிகுமார் கூறியுள்ளார்.
கீழே விழுந்த சங்கர் பின் தலையில் காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதால் சசிகுமாரை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சசிக்குமார் அன்னை சோனியா காந்தி பேரவையின் வடசென்னை மாவட்டச் செயலாளராக உள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT