Published : 22 Feb 2021 09:30 PM
Last Updated : 22 Feb 2021 09:30 PM
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் ரவுடிகளின் கணக்கெடுப்பு பணியில் போலீஸார் தீவிரம் காட்டுவதாகவும் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியபட்டு தேர்தல் ஆணையத்திடம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டப்பட்டது. அதனை இன்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்கள், காவலர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கெனவே சென்னை மவுண்ட் காவல் நிலையம், புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானம் ஆகிய பகுதிகளில் ஆவின் பாலகம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.
இது காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு, போலீஸாருக்கு மிகவும் பயன்படும்.
சட்டமன்ற பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளோம். சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் உள்ள ரவுடிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையில் பதற்றமான வாக்குசாவடிகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க உள்ளோம், தேர்தல் பிரச்சாரம், வாக்கு பதிவு நேரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவோம்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT