Last Updated : 23 Dec, 2020 09:00 PM

 

Published : 23 Dec 2020 09:00 PM
Last Updated : 23 Dec 2020 09:00 PM

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தனியார் பள்ளி வாகன ஓட்டுநர், உதவியாளருக்கு இறக்கும்வரை ஆயுள் சிறை- கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கோவை

மயக்க ஊசி செலுத்தி 4 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி ஓட்டுநர், உதவியாளருக்கு இறக்கும்வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையை அடுத்த காரமடையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த 2019 பிப்ரவரி 1-ம் தேதி பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் வேன் ஓட்டுநரான கோவில்பாளையம் அத்திபாளையத்தை அடுத்துள்ள சென்ராயபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (37), உதவியாளரான காரமடை கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (50) ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பள்ளி வேனில் கடைசி நிறுத்தத்தில் தினமும் இருவரும் இறக்கிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அப்போது வேனில் சிறுமியைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்பதைப் பயன்படுத்திக்கொண்ட ஓட்டுநரும், நடத்துனரும் ஜனவரி 29-ம் தேதி மாலை, மயக்க ஊசி செலுத்தி வேனிலேயே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப்பதிவு செய்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜெ.ராதிகா இன்று (டிச.23) தீர்ப்பளித்தார்.

அதில், கோவிந்தராஜ், மாரிமுத்து ஆகிய இருவரும் இயற்கையாக இறக்கும் வரை ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x