Published : 07 Dec 2020 06:42 PM
Last Updated : 07 Dec 2020 06:42 PM
சேலத்தில் மூத்த மகன் இறந்த விரக்தியில் தம்பதியர், இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தாங்களும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறை வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38). இவர் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள சலூன் கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோகிலா (35). இவர்களது மகன்கள் மதன்குமார் (17), வசந்தகுமார் (14), கார்த்திக் (10).
மதன்குமார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வசந்தகுமார் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பும், கார்த்திக் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று (6-ம் தேதி) வேலையை முடித்துவிட்டு முருகன் வீடு திரும்பினார். அனைவரும் உணவருந்திவிட்டுத் தூங்கச் சென்றனர்.
இன்று (7-ம் தேதி) காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக முருகன் வீட்டை எட்டிப் பார்த்தபோது, வாயில் நுரை தள்ளி ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்துக்குப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துணை ஆணையர் சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் (பொ) சிவகாமி தலைமையிலான போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு முருகன் உள்பட நான்கு பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.
சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட தடய அறிவியல் நிபுணர்கள், வீட்டில் பாதி குடித்து வைக்கப்பட்டிருந்த டீ டம்ளரைக் கைப்பற்றி, அங்கு பதிவாகியிருந்த கைரேகைப் பிரதிகளைச் சேகரித்தனர். மேலும், கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளனரா என்ற சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. நான்கு பேரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், முருகன் - கோகிலா மூத்த மகன் மதன்குமார் புற்றுநோய் பாதிப்பால் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்ததால், ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருந்ததாகவும், இதனால், டீயில் விஷம் கலந்து இரண்டு மகன்களைக் கொன்றுவிட்டு, தம்பதியும் விஷத்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், கடன் பிரச்சினை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT