Published : 22 Oct 2020 05:07 PM
Last Updated : 22 Oct 2020 05:07 PM
மரக்காணம் அருகே 13 வயதுச் சிறுவனை அடித்துக் கொலை செய்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நமரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய 13 வயது மகன் அதே ஊர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி திறக்காததால் வீட்டிலேயே படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி சிறுவன் வழக்கம்போல் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியான அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விவரமும் தெரியவில்லை.
இதையடுத்து, கோவிந்தராஜ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் மரக்காணம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுவன் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அதே கிராமத்தில் உள்ள கலைமணி மகன் அபினேஷ் (22) என்பவர் கடைசியாகப் பேசியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மரக்காணம் காவல் துறையினர் நொச்சிக்குப்பம், மீனவர் பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அபினேஷுடன் சிறுவன் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதனால் அபினேஷைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுவனை அடித்துக் கொலை செய்ததை அபினேஷ் ஒப்புக்கொண்டார். மேலும், நொச்சிக்குப்பம் சுடுகாடு அருகில் உள்ள ஒரு இடத்தில் உடலைப் புதைத்து வைத்துள்ளதையும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று (அக். 22) மரக்காணம் வட்டாட்சியர் உஷா முன்னிலையில் காவல்துறையினர் மாணவரின் உடலைத் தோண்டி எடுத்தனர். உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால் கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் உதித் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறுவனின் உடலை அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
மேலும், தடய அறிவியல் நிபுணர் ராஜி தடயங்களைச் சேகரித்தார். பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்து அபினேஷ் கொடுத்த வாக்கு மூலத்தில், "இரண்டு வாரத்திற்கு முன் என் தந்தை கலைமணியும், சிறுவனின் தந்தை கோவிந்தராஜும் சீட்டு ஆடினர். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இறந்துபோன சிறுவனின் அண்ணன், எனது தந்தையை அடித்துவிட்டார் . இதனால் பழிவாங்கும் நோக்கத்துடன் சிறுவனை விளையாட அழைத்துச் சென்று, கொலை செய்து உடலைப் புதைத்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொறு சிறுவனின் உடலைக் காவல் துறையினர் கைப்பற்றினர். இதன் அருகில்தான் கோவிந்தராஜின் மகன் உடலும் புதைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தக் கொலைச் சம்பவத்திலும் அபினேஷுக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT