Last Updated : 14 Oct, 2020 08:29 PM

 

Published : 14 Oct 2020 08:29 PM
Last Updated : 14 Oct 2020 08:29 PM

மாணவர் தற்கொலை விவகாரம்: இரு எஸ்.ஐ.,க்களை கைது செய்யக்கோரி ஆதார், ரேசன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம்- மதுரை பேரையூரில் பரபரப்பு

மதுரை   

மதுரை மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக இரு எஸ்.ஐ.,க்களை கைது செய்யக்கோரி ஆதார், ரேசன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடந்ததால் பேரையூரில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் மகன்களில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட உறவுக்காரப் பெண்ணை அழைத்துச் சென்றது தொடர்பாக சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கன்னியப்பனின் 3-வது மகனான கல்லூரி மாணவர் ரமேஷை போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். இதற்கிடையில் ரமேஷ் அடுத்தநாள் ஊருக்கு அருகிலுள்ள மலையடிவார மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

போலீஸாரின் மிரட்டலாலேயே அவர் தற்கொலை செய்தார் என்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் எஸ்.ஐ.,க்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுபடி, ரமேஷின் உடல் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், இரு எஸ்ஐக்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, பணியில் சேர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து ரமேஷ் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் என, சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார், ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்க, பேரையூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை திரண்டனர்.

சஸ்பெண்ட் செய்த இரு எஸ்.ஐ.,க்களை கைது செய்யவேண்டும், ரமேஷ் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றாவிடின் தாலுகா அலுவலகத்திற்குள் சமையல் செய்து, போராடுவோம் என, எச்சரித்தனர்.

உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமார், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தற்போதுவரை அவர்கள் கலைந்து செல்லவில்லை. இது பேரையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x