Published : 06 Oct 2020 05:48 PM
Last Updated : 06 Oct 2020 05:48 PM
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளைப் பயிரிட்ட விவசாயியைக் காவல் துறையினர் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையை ஒட்டியுள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஆலங்காயம் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விவசாயத் தொழிலில் பெரிய லாபம் பார்க்க முடியாததால் பல விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
குத்தகைக்கு விவசாய நிலங்களை எடுக்கும் சிலர் விளை நிலங்களில் ஊடுபயிராக கஞ்சா செடிகளைப் பயிரிட்டு அவற்றை ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்வதாகவும், வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் கஞ்சா செடிகள் சிறிய சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கே விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் தனிப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதி மற்றும் மலையை ஒட்டியுள்ள கிராமங்கள், அங்குள்ள விவசாய நிலங்களில் தனிப்படை காவல் துறையினர் கடந்த 2 மாதங்களாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஆலங்காயம் பகுதியிலும், புதூர்நாடு மலைப்பகுதியில் விவசாய நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகளைப் பயிரிட்ட 3 பேரை தனிப்படை காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.
மேலும், ஆந்திராவில் இருந்து திருப்பத்தூர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை நகர காவல் துறையினர் கடந்த வாரம் கைது செய்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னகவுண்டனூர் மலையடிவாரத்தைச் சேர்ந்த விவசாயி தருமன் (66) என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதை தனிப்படை காவல் துறையினர் உறுதி செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், எஸ்.பி. விஜயகுமார், டிஎஸ்பி தங்கவேல், போதை தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் காவல் துறையினர் இன்று (அக். 6) அங்கு சென்று சோதனை நடத்தியபோது தருமன் நிலத்தில் 500 கஞ்சா செடிகள் வளர்த்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த தனிப்படை காவல் துறையினர் அங்கிருந்த கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்து அழித்தனர். கைது செய்யப்பட்ட தருமன், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT