Published : 05 Oct 2020 06:23 PM
Last Updated : 05 Oct 2020 06:23 PM
சென்னை வில்லிவாக்கத்தில் முன் விரோதத்தில் வழக்கறிஞர் ஒருவரைப் பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல், தக்க சமயம் பார்த்து அவரைச் சரமாரியாகத் தலையில் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. சம்பவ இடத்தில கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் மேட்டுத்தெருவில் வசித்தவர் ராஜேஷ் (38). இவர் வழக்கறிஞர். இவரது மனைவி ரம்யா, மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்கின்ற பெயரில் கட்சி ஒன்றினை நடத்தி வருகிறார். அந்தக் கட்சிக்கு ஆலோசகராக ராஜேஷ் இருந்து வந்தார்.
ராஜேஷ் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு வியாசர்பாடி பிவி காலனியில் கால்பந்தாட்டப் போட்டியை நடத்தினார். அது முடிந்த பின்னர் தனது காரில் நேற்றிரவு எம்டிஎச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இருக்கும் தனது நண்பர் கோகுலின் அலுவலகத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல் கையில் அரிவாளுடன் திடீரென நுழைந்தது. ராஜேஷ் சுதாரிப்பதற்குள் அவரது தலை, முகத்தில் சரமாரியாக வெட்டித் தப்பியது. இதைப் பார்த்த நண்பர்கள் அலறி அடித்து ஓடினர்.
வழக்கறிஞர் கொலை குறித்து வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீஸார் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜேஷ் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாக உள்ளவர். இது தவிர வேறு சில பஞ்சாயத்துகளிலும் அவர் தலையிட்டிருந்ததால் அவருக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர்.
இதனால் அவர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருந்ததாகவும், கொலையான நேரத்தில் அது காரில் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்தில் ராஜேஷைக் கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அதில் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணிந்து வந்து கொலை செய்தது பதிவாகியுள்ளது.
கொலையாளிகள் திட்டமிட்டுக் கொலைச் சம்பவத்தை நிறைவேற்றியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஐபிஎல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என அறிந்து, திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர். ராஜேஷைப் பின்தொடர்ந்து வந்த அவர்கள் தங்கள் வாகனங்களை வேறொரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்று கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறை உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்களை வைத்துக் குற்றவாளிகளைக் கைது செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT