Published : 22 Aug 2020 08:36 PM
Last Updated : 22 Aug 2020 08:36 PM
பொம்மை பார்சல்கள், படுக்கை விரிப்புகள் இடையே தங்கப்பட்டைகளை வைத்து துபாயிலிருந்து கடத்தப்பட்ட ரூ.78.4 லட்சம் மதிப்புள்ள 1.45 கிலோ தங்கத்தைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் கரோனா ஊரடங்கால் துபாயிலிருந்து வேலையிழந்து சென்னை திரும்பிய பயணி சிக்கினார்.
சுங்கத்துறைக்குக் கிடைத்த ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை, துபாயிலிருந்து தனியாக வந்த பொருள்கள் முனையத்தில் சோதனையிட்டது. அப்போது ரூ.78.4 லட்சம் மதிப்புள்ள 1.45 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தது.
கரோனா தொற்று காரணமாக பொது முடக்கத்தால் வேலையிழந்த துபாய் பயணி ஒருவரின் பார்சல் அது என சுங்கத்துறையினருக்குத் தெரியவந்தது. அவர் ஏற்கெனவே சென்னை திரும்பிவிட்ட நிலையில் , இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம், தனியாக அனுப்பப்பட்ட பார்சலில் கடத்தல் தங்கம் வந்துள்ளது.
அவரது பார்சல் பொருள்கள் அடங்கிய பெட்டியைச் சுங்கத்துறையினர் திறந்து பார்த்தபோது, அதில் படுக்கை விரிப்புகள், பொம்மைப் பெட்டிகள் மற்றும் சில பொருள்கள் இருந்தன. படுக்கை விரிப்புகள் அட்டையால் சுற்றப்பட்டிருந்தது. அதை எடுத்தபோது, சம்பந்தமில்லாத வகையில் மிகவும் கனமாக இருந்துள்ளது.
அதைப் பிரித்துப் பார்த்தபோது, கார்பன் பேப்பரால் சுற்றப்பட்டு, அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த தங்கப்பட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல பொம்மைப் பெட்டிகளிலும் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றிலும் தங்கப்பட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. நான்கு பெட்டிகளிலிருந்து, மூன்று படுக்கை விரிப்புகள் மற்றும் ஏழு பொம்மைப் பெட்டிகளில் இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1.45 கிலோ எடையிருந்தது. 10 தங்கப்பட்டைகளாக அவை இருந்தன. 1962 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின்படி அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.78.4 லட்சம் ஆகும். இதையடுத்து அந்தப் பயணியைப் பிடிப்பதற்காகக் காத்திருந்த நிலையில் தனது பார்சல் சிக்கியது தெரியாமல் வாங்க வந்த அவரைக் கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், துபாயில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி கோவிட்-19 காரணமாக வேலை இழந்தவர் என்பதும், அண்மையில் சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT