Published : 23 Jul 2020 05:05 PM
Last Updated : 23 Jul 2020 05:05 PM
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
ராணுவவீரர்களின் வீடுகளில் தொடர் கொள்ளையால் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிங்கம்புணரி அருகே மருதிபட்டியைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் நாகசுந்தரம் (70). அவரது மனைவி விஜயலட்சுமி (61), மகன் வெங்கடேஷ்வரன் (36), மருமகள் கவிதா (32) மற்றும் 2 பேத்திகளுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு 9 மணிக்கு முகமூடி அணிந்திருந்த 7 பேர், அவரது வீட்டின் பின்புற சுற்றுச்சுவரில் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.
அவர்களைth தடுக்க முயன்ற வெங்கடேஷ்வரன் கையில் கத்தியால் குத்தினர். தொடர்ந்து குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். இதனால் அனைவரும் பயந்து அமைதியாக இருந்தனர். இதையடுத்து பீரோவில் இருந்தது, கழுத்தில் அணிந்திருந்தது என 25 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் கண்காணிப்பு கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், மொபைல்களையும் எடுத்துச் சென்றனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
சம்பவ இடத்தை ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகணன், சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதன், திருப்பத்தூர் டி.எஸ்.பி அண்ணாதுரை பார்வையிட்டனர்.
எஸ்வி மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 14-ம் தேதி காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி, தாயாரை கொன்று விட்டு, நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் தடயங்கள் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
கொள்ளையர்களை இயக்கிய தலைவன்
இந்நிலையில் தொடர்ந்து ராணுவ வவீரர்களின் வீடுகளில் நடந்து வரும் கொள்ளை சம்பவத்தால் சிவகங்கை மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் 7 பேரும் முகமூடி, கையுறை அணிந்திருந்தனர். மேலும் ஒருவர், மற்ற 6 பேரை விட வயது அதிகம் உள்ளவராக இருந்துள்ளார். அவர் மட்டும் 6 பேருக்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனால் அவர் எந்த செயலிலும் ஈடுபடவில்லை.
இதனால் தலைவனாக செயல்பட்டவன் கைதேர்ந்த கொள்ளையனாகவும், மற்றவர்கள் புதிதாக கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT