Published : 20 Jun 2020 06:09 PM
Last Updated : 20 Jun 2020 06:09 PM
மணப்பாறையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தவளைவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி கணேசன். இவரது தாயார் நல்லம்மாள் பெயரில் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான பணிகளை சிவாஜி கணேசன் மேற்கொண்டிருந்தார். அப்போது வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான அரசு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமெனில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென என்.பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ) பொறுப்பு வகிக்கும் வீ.பெரியபட்டி வருவாய் ஆய்வாளரான ஜோதிமணி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு சிவாஜி கணேசன் ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே, தவளைவீரன்பட்டி கிராம உதவியாளரான ராஜேஸ்வரி (46) வாயிலாக சிவாஜி கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.15 ஆயிரம் வழங்குமாறு ஜோதிமணி கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவாஜி கணேசன், இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸில் புகார் செய்தார்.
அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்ற சிவாஜி கணேசன், இன்று (ஜூன் 20) மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ஜோதிமணி, ராஜேஸ்வரி ஆகியோரிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்தார். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி கருப்பையா, இன்ஸ்பெக்டர் சக்திவேல், சேவியர்ராணி, அருள்ஜோதி உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் ஜோதிமணி, ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே, லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்ட சமயத்தில் மணப்பாறை வட்டாட்சியர் தமிழ்க்கனி தனது அலுவலகத்தில் இருந்து வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT