Published : 09 Jun 2020 04:19 PM
Last Updated : 09 Jun 2020 04:19 PM

ஒரே மருத்துவமனைக்கு 2 போலீஸ் நிலையம்: மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடா?- நோயாளிகள் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத அவலம் 

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவரை, 4 பேர் கொண்ட கும்பல் வார்டிற்குள் புகுந்து வெட்டிக் கொன்று தப்பிச் சென்றது.

மருத்துவமனை குற்றச்செயல்களை கண்காணிக்க வேண்டிய மருத்துவமனை போலீஸ் நிலைய போலீஸாரை மாற்றுப்பணிக்கு அனுப்பிவிடுவதால் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது.

அதனால், சிகிச்சை பெறும் நோயாளிகளின் உடமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத அவலம் உள்ளது.

சென்னைக்கு அடுத்து அதிகப்படியான அனைத்து மருத்துவப்பிரிவு துறைகள் உள்ளடக்கிய மிகப்பெரிய மருத்துவமனை என்ற சிறப்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உண்டு.

அதனால், தென்காசி, திருநெல்வேலி முதல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தமிழக எல்லை தாண்டி கேரளா எல்லையோர மாவட்டங்களில் இருந்தும் இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். நாள் ஒன்றிற்கு 3 ஆயிரம் உள் நோயாளிகள், 9 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், பார்வையாளர்கள் உள்பட சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவமனை வளாகத்தில் தினமும் வந்து செல்லக்கூடிய மிக பிரம்மாண்டமான மருத்துவமனையாக இது திகழ்கிறது. இந்த மருத்துவமனை ஒரே வளாகத்திற்குள் இல்லாமல், கோரிப்பாளையம் பழைய மருத்துவப்பிரிவு கட்டிடம், அண்ணா பஸ்நிலையம் புதிய மருத்துவப்பிரிவு கட்டிடம் மற்றும் மருத்துவக்கல்லூரி மைதானத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் உள்ளது.

இதுவே, மருத்துவமனை கண்காணிப்பு மற்றும் நிர்வாக குளறுபடிக்கு, முக்கியக் காரணமாக உள்ளது. மருத்துவமனை பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு கோரிப்பாளையம் பழைய மருத்துவப்பிரிவு கட்டிடத்தில் தனி போலீஸ் நிலையமே செயல்படுகிறது. இந்த போலீஸ்நிலையத்தில் 45 போலீஸார் பணியிடங்கள் உண்டு. ஆனால், போலீஸார் பற்றாக்குறையால் இங்கு 2 நேரடி எஸ்ஐகள், 6 சிறப்பு எஸ்ஐகள் மற்றும் 25 போலீஸார் மட்டுமே பணிபுரிகின்றனர்.

இவர்கள் கோரிப்பாளையம் பழைய மருத்துவக்கட்டிடப்பிரிவு வளாகத்தில் அன்றாடம் நடக்கும் பிரச்சினைகள் குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்வார்கள்.

அருகில் உள்ள மதிச்சியம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்தான், இந்த மருத்துவமனை போலீஸ் நிலையத்திற்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டராக உள்ளார். அதனால், மருத்துவமனை போலீஸ்நிலைய போலீஸாரில் பெரும்பாலானோர், மாற்றுப்பணி என்ற அடிப்படையில் மதிச்சியம் போலீஸ் நிலையப்பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அதனால், மிகக் குறைவான போலீஸாருடன் மருத்துவமனை போலீஸ் நிலையம் செயல்படுவதால் அவர்களால் மருத்துவமனையை முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. கண்காணிப்பு காமிராக்கள் இருந்தும், அதை போலீஸாரால் 24 மணி நேரமும் கண்காணிக்க முடியவில்லை. நேற்று மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளி கொலை செய்யப்பட்ட அண்ணா பஸ்நிலையம் புது மருத்துவப்பிரிவு கட்டிடம், மருத்துவமனை போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வரவில்லை.

எல்லைகளை பிரிப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் இந்த மருத்துவப்பிரிவு கட்டிடம், அருகில் உள்ள மதிச்சியம் போலீஸ்நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், மருத்துவமனை போலீஸார் நேரடியாக இந்த மருத்துவப்பிரிவு கட்டிடத்தை கண்காணிக்க மாட்டார்கள்.

மதிச்சியம் போலீஸார்தான், இந்தக் கட்டிடத்தை கண்காணிக்க வேண்டும். ஆனால், ஒரே இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில்தான் இரண்டு போலீஸ்நிலையம் செயல்படுவதால் மருத்துவமனை போலீஸ் நிலையத்தின் 2 போலீஸாரை மட்டும் நேற்று கொலை நடந்த புது மருத்துவப்பிரிவு கட்டிட புறகாவல்நிலைய பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த மருத்துவப்பிரிவு கட்டிடத்தில்தான் அவசர சிகிச்சைப்பிரிவு, தலைகாயம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட முக்கிய சிகிச்சைப்பிரிவுகள் உள்ளன. இப்படி ஒரே அரசு மருத்துவமனை இரு போலீஸ்நிலையம் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், மருத்துவமனை போலீஸ்நிலையம் போலீஸார் மாற்றுப்பணிக்கு அனுப்பப்படுவதாலும் மருத்துவமனையில் நடக்கும் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் அன்றாடப் பிரச்சினைகள், அவர்கள் பொருட்கள் திருட்டுச் சம்பவங்கள், பிரச்சினைகள் பற்றி போலீஸார் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

மருத்துவனைக்கு வரும் விபத்து, கொலை மற்றும் மற்ற குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்கள் பற்றி மாநகர காவல்துறைக்கு தகவல் அளிக்கும் சாதாரண புறக்காவல்நிலையம் போலவே கோரிப்பாளையம் மருத்துவமனை போலீஸ்நிலையம் உள்ளது.

நோயாளிகள், பார்வையாளர்கள் உடமைகள், பொருட்கள் அடிக்கடி திருடுப்போகிறது. ஆனால், அதை பற்றி புகார் செய்தாலும் மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிவு செய்வதே கிடையாது. வார்டுகளில் பணிபுரியும் தனியார் செக்கியூரிட்டிகளை கவனித்தால் எளிதாக யார் வேண்டுமென்றாலும் வார்டுக்குள் சென்று வரும்நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரத்தில் மிகச் சாதாரணமாக வெளியாட்கள் பலர் தூங்கிச் செல்கின்றனர். அவர்களை விசாரிப்பது, ஆதரவற்றவர்களாக இருந்தால் அவர்களை மீட்டு அரசிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட எந்த பணிகளையும் போலீஸார் செய்வதில்லை.

போலீஸாரின் இந்த பாதுகாப்பு குறைபாட்டாலே நேற்று அண்ணா பஸ்நிலையம் புது மருத்துவப்பிரிவு கட்டிடத்தில் 4 பேர் கும்பல், மருத்துவமனை வார்டிற்குள்ளே புகுந்து நோயாளியை சாவகாசமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுபோல், இன்னும் பல குற்றச்செயல்கள் மருத்துவமனையில் நடக்கிறது. அதனால், 3 மருத்துவப்பிரிவு கட்டிடத்திற்கும் சேர்த்து ஒருங்கிணைந்த மருத்துவமனை போலீஸார் நிலையம் அமைத்து, அவர்களை மருத்துவமனை கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு மட்டுமே பயன்படுத்த மாநகர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மதிச்சியம் போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘மருத்துவமனை பல்வேறு காலக்கட்டங்களில் தரம் உயர்த்தப்பட்டது. இதில், அண்ணா பஸ்நிலையம் புதிய மருத்துவமனைப்பிரிவு, மதிச்சியம் போலீஸ்நிலையம் கட்டுப்பாட்டில் வருகிறது. இங்குள்ள போலீஸார் மதிச்சியம் பகுதியில் உள்ள மற்ற சட்டம் ஒழுங்கு, குற்றச்செயல்களை கண்காணிக்க வேண்டிய இருப்பதால் தினமும் 2 மருத்துவமனை போலீஸாரை சுழற்சி முறையில் புது மருத்துவப்பிரிவு புறக்காவல்நிலையத்திற்கு அனுப்புகிறோம். கூடுதல் போலீஸாருடன் ஒருங்கிணைந்த ஒரே போலீஸ்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x