Published : 08 Jun 2020 02:46 PM
Last Updated : 08 Jun 2020 02:46 PM
மதுரையில் பழிக்குபழி சம்பவமாக அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சையில் இருந்தவரை 4 பேர் கும்பல் அதிகாலையில் வெட்டிக்கொலை செய்தது. இது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை கரும்பாலைச் சேர்ந்தவர் முருகன் (40). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளன. இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்கும் உள்ளது. சிறுநீரகக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த 5-ம் தேதி மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முருகனின்உறவினர் என, காவலாளியிடம் கூறிவிட்டு அவரை பார்க்க வார்டுக்குள் சென்றனர்.
அவரது படுக்கைக்கு சென்ற அவர்கள் திடீரென பட்டாக்கத்திகளை கொண்டு சரமாரியாக முருகனை வெட்டினர். இதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் வார்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அலறியடித்து வெளியே ஓட்டினர். வார்டு காவலாளி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸார் அங்கு வருவதற்குள் 4 பேரும் தப்பினர். மதிச்சியம் போலீஸார் உடலை மீட்டுதனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஓராண்டுக்கு முன், வைகை ஆற்றுக்குள் கஞ்சா வியாபாரி ராஜ்குமார் என்பவரின் கொலையில் தொடர்புடையவர் முருகன் என்பதும், ராஜ்குமார் தரப்பினர் பழிக்குப் பழியாக முருகனை கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்தது. அதிகாலை நேரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த மருத்துவர்கள், செவலியர்கள் கண்முன் நடந்த இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் கூறியது: கஞ்சா வியாபாரியான கரும்பாலை ராஜ்குமார் ஓராண்டுக்கு முன், கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த முருகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். சமீபத்தில் இவர்களைப் பார்த்து, ராஜ்குமாரின் மனைவி, ‘‘ கணவரைக் கொன்ற உங்களை கொலை செய்யாமல் விடமாட்டேன்,’’ என, சபதம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கொலையுண்ட முருகன் உட்பட 8 பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
ராஜ்குமார் தரப்பினருக்கு தொடர்பு இருக்கலாம் என, கருதுகிறோம். அந்த கோணத்தில் விசாரிக்கிறோம். மேலும், மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பதிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT