Published : 27 May 2020 03:24 PM
Last Updated : 27 May 2020 03:24 PM
மதுரையில் மிரட்டல் நோக்கில் போலீஸ்காரர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள மேலமடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஷாஜகான்(25). இவர் சென்னையிலுள்ள 42-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
கரோனா விடுமுறைக்காக மதுரைக்கு வந்ததார். நேற்று நள்ளிரவு 1 மணிக்கு இவரது வீ்ட்டு வாசலில் பயங்கர சத்தம் கேட்டது. ஷாஜகான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி அண்ணா நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உதவி காவல் ஆணையர் லில்லிகிரேஸ், ஆய்வாளர் ரமணி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இது குறித்த விசாரணையில், கடந்த 25-ம் தேதி வழிப்பறி, வீடு புகுந்த கொள்ளையடிக்க திட்டமிட்டதாக கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட யாகப்பா நகர் சூரியா (21), பால முருகன்(20), மேலமடை அன்புச்செழியன்(34), அலங்காநல்லூர் இருதயராஜ்(25), புதூர் சதாம் உசேன்(28) ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இவர்களை போலீஸில் சிக்க வைக்க, காவலர் ஷாஜகான் தான் காரணம் என, அவர்கள் கருதி உள்ளனர். இந்த ஆத்திரத்தில் அவர்களின் நெருங்கிய கூட்டாளிகள் மூலம் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘ஏற்கெனவே கைதான 5 பேரும் சில நாட்களுக்கு முன், ஷாஜகானுடன் தகராறு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டதால் ஷாஜகான் புகாரில் கைது செய்யப்பட்டதாக அன்புச்செழியன் உள்ளிட்ட 5 பேரும் கருதியுள்ளனர்.
ஆனாலும், அவர்களை வேறொரு தகவலின் அடிப்படையில் கைது செய்தோம். அவர்கள் மீது சில வழக்குகள் நிலுவையிலுள்ளன. ஷாஜகான் தான் கைது நடவடிக்கைக்குக் காரணம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு, அவரை மிரட்டும் நோக்கில் அன்புச்செழியன் நண்பர் வேல்முருகன்(27) மூலம் நாட்டு வெடிகுண்டை வீசி இருக்கின்றனர். வேல்முருகன் கைது செய்யப்பட்டார்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT