Last Updated : 21 May, 2020 10:59 AM

 

Published : 21 May 2020 10:59 AM
Last Updated : 21 May 2020 10:59 AM

அரியலூர் அருகே மின் ஊழியர் கொலை வழக்கில் மகன்கள் இருவர் கைது: சொத்துக்காக தந்தையையே கொலை செய்தது அம்பலம்

கலைச்செல்வன், கலைவாணன்

அரியலூர்

அரியலூர் அருகே மின் ஊழியர் கொலை வழக்கில் சொத்துக்காக தந்தையையே கொலை செய்த இரு மகன்களை போலீஸார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமழபாடியைச் சேர்ந்தவர் கனகசபை (51). இவர் கீழப்பழுவூர் துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி அதிகாலை துணை மின்நிலையத்தில் பணியிலிருந்த அவர், அலுவலகத்தில் உள்ள ஓய்வறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

கனகசபை

இதுகுறித்து கனகசபையின் இரண்டாவது மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீஸார் கனகசபையின் உடலைக் கைப்பற்றி விசாரனை மேற்கொண்டர்.

கனகசபைக்கு இரண்டு மனைவிகள் என்பதும், அதில் முதல் மனைவி அஞ்சம்மாளுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி சங்கீதாவுக்கும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. கனகசபை முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், கனகசபை முதல் மனைவிக்கு சொத்து, பணம் ஏதும் தரவில்லை என்றும், அதற்காக ஜீவனாம்சம் கேட்டு அஞ்சம்மாள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அஞ்சம்மாளின் மகன்களான கலைச்செல்வம் (27), கலைவாணன்(22) ஆகியோர் சேர்ந்து தந்தையைக் கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல நாட்களாகக் காத்திருந்த அவர்கள், தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததைப் பயன்படுத்தி, இரவு நேரத்தில் பணியில் இருப்பதை அறிந்துகொண்டு, கடந்த 18-ம் தேதி நள்ளிரவு கீழப்பழுவூரில் உள்ள துணை மின்நிலையத்துக்குச் சென்று, அங்கு தூங்கிக்கொண்டிருந்த கனகசபையை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இருவரையும் நேற்று (மே 20) இரவு கீழப்பழுவூர் போலீஸார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தனது தந்தையையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x