Published : 07 May 2020 04:12 PM
Last Updated : 07 May 2020 04:12 PM
குமரியில் குளச்சல் இரும்பிலியில் உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்து இரு டாஸ்மாக் கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் மதுபாட்டில்கள் எரிந்து சேதமாகின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நடைபெற்றது. வரிசையில் காத்து நின்று மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கினர்.
இந்நிலையில் குளச்சல் இரும்பிலியில் உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்து இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது விற்பனைக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கிடையில் காலையில் மதுகடையின் பின்னால் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த இரு குடோனில் இருந்தும் புகை மூட்டமாக வந்தது. சற்று நேரத்தில் மதுபாட்டில்கள் இருந்த அட்டை பெட்டிகள் எரிந்து தீ பரவியது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். குளச்சல் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து மதுக்கடையில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் பல லட்சம் மதிப்பலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமாயின.
சம்பவம் பற்றி அறிந்த குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ்வர சாஸ்திரி, மற்றும் போலீஸார் தீபற்றி எரிந்த டாஸ்மாக் கடையை சென்று பார்வையிட்டனர்.
அப்போது, இரு கடைகளின் பின்னால் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பின்பக்க ஜன்னல் வழியாக தீ பரவி இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் பின்பக்கம் வழியாக இரு மதுகடைக்கும் தீ வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் ஒரு மதுகடையில் தீ உடனடியாக அணைக்கப்பட்டு மதுபாட்டில்கள் சேதமாகாமல் காக்கப்பட்டது. அதே நேரம் மற்றொரு கடையில் பெரும்பாலான மதுபாட்டில்கள் எரிந்து தீக்கிரையாகின. மதுகடையில் தீ வைத்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபாட்டில்கள் முற்றிலுமாக எரிந்த கடையில் இன்று மதுவியாபாரம் ரத்து செய்யப்பட்டது. பக்கத்தில் இருந்த மற்றொரு கடையில் வியாபாரம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT