Last Updated : 01 Apr, 2020 01:37 PM

2  

Published : 01 Apr 2020 01:37 PM
Last Updated : 01 Apr 2020 01:37 PM

திருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா?- போலீஸ் விசாரணை; ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை

திருப்பரங்குன்றம் அருகே சரக்கு ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த இளைஞர் கரோனா வதந்தியால் தற்கொலை செய்தாரா எனப் போலீஸ் விசாரிக்கினறனர்.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் (37) ஒருவர் கேரள மாநிலம் திருச்சூரில் இரும்புக்கடை பணிபுரிந்தார். மனைவியைப் பிரிந்து, கடந்த 3 ஆண்டாக தாயாருடன் வசித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் மதுரைக்கு வந்தார். கேரளாவில் இருந்து வந்ததால் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவரும், அவரது தாயாரும் சமீபத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

இருவருக்கும் அது போன்ற வைரஸ் தொற்று எதுவுமில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. ஆனாலும், இருவரையும் வீட்டில் தனிமையில் இருக்க, மருத்துவர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த இளைஞர் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. அவர் கரோனா பயத்தில் இறந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ‘‘அவர் கேரளாவில் இருந்து வந்ததால் கரோனா பயம் இருந்திருக்கிறது. மருத்துவ ஆய்வில் அப்படியொன்றும் அவருக்கு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், கரோனா பரிசோதனைக்குச் சென்ற அவரது வீடியோ சமூகவலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கரோனா பாதித்த நபர் என்று தன்னை அடையாளப்படுத்திய அந்த வீடியோ வைரலானதால் சம்பந்தப்பட்ட இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், மதுபானக் கடைகளை மூடியதாலும், செலவுக்குப் பணமின்றி விரக்தியில் இருந்துள்ளார் எனவும் தெரிகிறது. இச்சூழலில் தான் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறார் எனத் தெரிகிறது.

தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கிறோம்,’’ என்றனர்.

ஆட்சியர் எச்சரிக்கை:

இதற்கிடையில் கரோனா பாதிப்பு தொடர்பாக வதந்திகளைப் பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய அவர், கரோனா தொடர்பாக வதந்திகளைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே இதுபோன்ற வதந்தியைப் பரப்பிய நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளோம் என்று எச்சரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x