Published : 04 Mar 2020 12:27 PM
Last Updated : 04 Mar 2020 12:27 PM
நேற்று மாலை அண்ணா சாலையில் கார்மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றவர்கள் மோட்டார் பைக் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரபல தாதாவைக்கொல்ல சினிமா பாணியில் ரவுடிகளுக்கிடையே துரத்தல் சம்பவம் பலமணி நேரம் நடந்துள்ளது. கொலை முயற்சி தோல்வியில் முடியவே அனைவரும் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே ஜெமினி பாலம் இறக்கத்தில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன.
அப்போது ஆயிரம் விளக்கிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி ஜெமினி பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சாலையில் நடுவில் தடுப்பை ஒட்டி சென்று சாலையின் அந்தப்பக்கம் ஜெமினி பாலத்திலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையம் நோக்கி தவறான பாதையில் சென்ற கார்மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.
ஆனால் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளும் காரின்மீது படவில்லை. அதே நேரம் கார் திடீரென வலதுபுறம் திரும்பி ஜி.என்.செட்டி சாலை நோக்கி வேகமாக சென்றுவிட்டது. வெடிகுண்டை வீசியவர்கள் தேனாம்பேட்டை நோக்கி தப்பிச் சென்றனர்.
அண்ணா சாலையில் அதுவும் தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் வந்து தடயங்களை சேகரித்தார்.
இந்நிலையில் வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து அறிய சிசிடிவி கேமாராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெடிகுண்டை வீசிவிட்டுச் சென்ற மோட்டார் பைக் மட்டுமல்லாமல் 8 மோட்டார் பைக்குகள் அதே இடத்தில் சுற்றி வந்ததும், அதில் ஒரு மோட்டார் பைக் போலி முகவரி கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது.
மொத்தம் 8 பைக்குகளில் பலர் சுற்றி வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்தஇது தவிர குற்றவாளிகளை பிடிக்க 4 ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெறுகிறது.
வெடிகுண்டு வீசியவர்கள் வந்த பைக் எண் அடையாளம் காணப்பட்டது. போலீஸார் உடனடியாக எடுத்த விலாசத்தில் வாகன உரிமையாளர் தி.நகர் சேர்ந்த ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த பைக்கின் உரிமையாளர் வாகனத்தை விற்க மெக்கானிக் ஒருவர் இந்த பைக்கை அவரிடமிருந்து வாங்கி தற்போதுள்ள உரிமையாளருக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது அந்த பைக்கை கல்லூரியில் பயிலும் அவரது மகன் ஓட்டிவருகிறார். போலீஸார் தேடிச் செல்வதை அடுத்து பைக் உரிமையாளர் மகனும் அவருடன் சென்ற அவரது கல்லூரித் தோழரும் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தொடர்புக்கொள்ள முயன்றபோது செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன.
இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மற்ற மோட்டார் பைக்கில் வந்தவர்களையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதுத்தவிர திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கும் அங்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர தப்பிச் சென்ற காரின் எண்ணையும் போலீஸார் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. காரில் தப்பிச் சென்றது இரண்டு முக்கிய தாதாக்கள் எனவும் ஒருவர் தேனாம்பேட்டையயை சேர்ந்த பிரபல ரவுடி என்பதும், மற்றொருவர் வடசென்னையில் உள்ள ஒரு பிரபல தாதா என்பதும் இருவரும் பழைய வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பி கொண்டிருந்த போது அவர்களை குறிவைத்த எதிரணியினர் தேனாம்பேட்டை ஜெமினி பாலம் அருகே அவர்களை சுற்றி வளைக்க முயற்சி செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க அண்ணா சாலையில் பலமுறை சுற்றி சுற்றி காரில் இருந்தவர்கள் போக்கு காட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜெமினி பாலத்தின் கீழே ஒருவழிப்பாதையில் புகுந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் முன் உள்ள பாதை வழியாக ஜி.என்.செட்டி சாலை வழியாக காரில் தப்பிக்க முயன்றபோதுதான் மறுபக்கச் சாலையிலிருந்து குண்டு வீசப்பட்டுள்ளது. குண்டு கார்மீது பட்டிருந்தால் வேறு பல மோசமான சம்பவங்கள் நடந்திருக்கும்.
படாமல் சாலையில் விழுந்து வெடித்ததால் அனைவரும் கலைந்து ஓடிவிட்டனர் என போலீஸார் கருதுகின்றனர். தப்பிச் சென்றது வடசென்னையின் பிரபல தாதாவாக இருக்கலாம் அவரை கொல்லும் முயற்சியில் பைக்கில் வந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் சென்னை ரவுடிகள் பாண்டிச்சேரி பாணியில் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் அளவுக்கு தேறிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.
சென்னையில் போலீஸாரின் கடும் நடவடிக்கைக் காரணமாக பயந்து ஒடுங்கியிருந்த ரவுடிகள் மீண்டும் துணிச்சலாக தலைத்தூக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.
தனிப்படை போலீஸார் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் பிடித்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும். இன்று மாலைக்குள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிக்குவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT