Published : 03 Mar 2020 08:13 PM
Last Updated : 03 Mar 2020 08:13 PM
திருமங்கலம் அருகே கப்பலூரில், நட்புக்கு இடையூறாக இருந்த தனது கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் ஆணைக்குழாய் மேலத்தெருவைச் சேர்ந்த முத்தையா - காளீஸ்வரியின் மகன் மணிகண்டன் (28). இவர் தனியார் வங்கியில் முகவராக வேலை பார்த்தார். இவருக்கும் திருமங்கலம் கப்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிவக்குமார்- சித்ராதேவியின் மகள் ஜோதிலெட்சுமிக்கும் (18) இரண்டரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையில், 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிலெட்சுமியின் தந்தை சிவக்குமார், இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தார். அவரை கவனித்துக்கொள்ள ஜோதிலெட்சுமி குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அப்போது, கப்பலூர் செல்வலட்சுமி நகரைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் ஜோதிலெட்சுமிக்கு நட்பு ஏற்பட்டது.
பின்னர், ஜோதிலெட்சுமி தனது கணவர் வீட்டுக்குச் சென்ற பின்னரும், நண்பரான கார்த்திக்குடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை கணவர் மணிகண்டன் கண்டித்ததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் ஜோதிலெட்சுமி மீண்டும் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்
இதனிடையே நேற்று (திங்கள்கிழமை) ஜோதிலெட்சுமியின் நண்பரான கார்த்திக், விருதுநகரிலுள்ள மணிகண்டன் வீட்டிற்குச் சென்று சமரசப்படுத்த மணிகண்டனை ஜோதிலெட்சுமி பெற்றோர் அழைத்து வரச்சொன்னதாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், மாமனார் வீட்டுக்குச் சென்ற மணிகண்டன், வெகு நேரமாகியும் வராததால் ஆஸ்டின்பட்டி போலீஸில் மணிகண்டனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
திருமங்கலம் டிஎஸ்பி அருண் விசாரணையில், ஜோதிலெட்சுமியின் வீட்டு அருகில் கத்திக்குத்து காயங்களுடன் மணிகண்டன் சடலமாகக் கிடப்பது தெரிந்தது. சடலத்தைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், மணிகண்டன் கொலையில் தொடர்புடைய கார்த்திக் அவரது நண்பர்கள், மற்றும் மனைவி ஜோதிலெட்சுமி, மாமனார் சிவக்குமார், மாமியார் சித்ராதேவி, மனைவி ஜோதிலெட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர். இதில் தலைமறைவான கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை போலீஸார் தேடி வருகின்றனர். -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT