Published : 27 Feb 2020 11:34 AM
Last Updated : 27 Feb 2020 11:34 AM
போச்சம்பள்ளி அருகே 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது சகோதரர் சாம்பசிவம். முன்னாள் ராணுவ வீரர். இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (பிப்.25) உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அவரை காண வீட்டை பூட்டிவிட்டு ஓசூருக்கு சென்றிருந்தனர். இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, கதிர்வேல் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள், ரூ.55 ஆயிரம் ரொக்கம், சாம்பசிவம் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் ரூ.55 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
தகவலறிந்த நாகரசம்பட்டி போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதேபோல், நாகரசம்பட்டி அருகே உள்ள சென்றாயபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருப்பதி என்பவர் வீட்டிலும் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஒரே இரவில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாகரசம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT