Published : 20 Feb 2020 09:54 PM
Last Updated : 20 Feb 2020 09:54 PM
கொச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட வந்த திருடன் அது ராணுவ வீரர் வீடு என்று தெரிந்தவுடன் தெய்வமே உன் வீட்டிலா திருட வந்தேன் மன்னித்துக்கொள்ளுங்கள் என சுவற்றில் கிறுக்கிவிட்டு சென்றுள்ளார்.
கொச்சி அருகே, திருவாங்குளம் பகுதியில் வசிப்பவர் ஐசக். இவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். சில நாட்களுக்கு முன் இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றிருந்தார். அப்போது அதே பகுதியில் திருடன் ஒருவன் கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம் பொருட்களை திருடியுள்ளார்.
இவ்வாறு ஐந்து கடைகளில் பணம் மற்றும் நகைகளை திருடிவிட்டு அருகில் இருந்த ஐசக் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அங்கிருந்த பொருட்களை எடுத்து மூட்டைக்கட்டி கிளம்பும் நேரத்தில் ராணுவ வீரர் ஐசக்கின் தொப்பி மற்றும் புகைப்படத்தைப் பார்த்துள்ளார்.
ஐயகோ, தெய்வமே உங்கள் வீட்டிலா திருட வந்தேன். நாட்டுக்காக உழைக்கும் உங்கள் வீட்டில் திருடுவதா? என்னை மன்னித்து விடுங்கள் என மனதுக்குள் புழுங்கிய அந்த திருடன் அதை சுவற்றில் எழுதிவைத்துவிட்டு, தான் செய்த செயலுக்கு துக்கம் தாளாமல் பீரோவில் ராணுவ வீரர் வைத்திருந்த மிலிட்டரி ரம்மில் ஒரு பெக்கை உள்ளே ஊற்றி துக்கத்தை ஆற்றிவிட்டு கிளம்பிச்சென்றுள்ளார்.
மறுநாள் கடைகளில் திருட்டுப்போன தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பக்கத்தில் உள்ள ராணுவ வீரர் ஐசக் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். உள்ளே பொருட்கள் கலைந்து கிடப்பதையும், ரம் பாட்டிலில் கொஞ்சம் குறைந்திருப்பதையும் பார்த்து சுவற்றில் எழுதியுள்ள வாசகங்களை படித்து ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
மறுபுறம் எதையும் திருடாமல் சென்ற அவனது நல்ல குணத்தை எண்ணி சந்தோஷப்பட்ட போலீஸார் திருடனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேசப்பக்தி எதிலெல்லாம் இருக்கிறது என்று இந்தச்செய்தியை படித்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT