Published : 19 Feb 2020 08:03 PM
Last Updated : 19 Feb 2020 08:03 PM
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
எட்டயபுரம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(60). இவருக்கு எட்டயபுரம் அருகே மானாவாரி நிலம் உள்ளது. இங்கு மக்காச்சோளம் அறுவடை நடந்து வருகிறது.
இதற்காக இன்று பெரியசாமி தனது டிராக்டரில், தனது மனைவி மரகதம்(55), அவர் வசிக்கும் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ராமலட்சுமி(26), குமரேசன் மனைவி லட்சுமி(30), மாதாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(57), அவரது மனைவி அந்தோணியம்மாள்(55), பீட்டர் மனைவி கீதாராணி(45), இம்மானுவேல் மனைவி மரியவிஜி(40), காசிராஜா மணி மனைவி பிரியங்கா(26), அமல்ராஜ் மனைவி பத்ரகாளி(30), சங்கரதாஸ் மனைவி மரிய பாக்கியம்(58) ஆகியோரை அழைத்துக் கொண்டு எட்டயபுரம் அருகே உள்ள காட்டில் களையெடுக்கச் சென்றார்.
மாலை 4 மணிக்கு அவர்கள் டிராக்டரில் மீண்டும் ஊருக்குப் புறப்பட்டனர். டிராக்டரை பெரியசாமி ஓட்டினார். மதுரை - தூத்துக்குடி இடையே எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, தூத்துக்குடிக்குச் சென்ற லாரி டிராக்டரின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டர் சாலையோரமாகக் கவிழ்ந்தது. அதிலிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அந்தோணியம்மாள், கீதாராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் உடனடியாக எட்டயபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயமடைந்த பெரியசாமி, மரகதம், ராமலட்சுமி, லட்சுமி, ராஜேந்திரன், மரியவிஜி, பிரியங்கா, மரியபாக்கியம், பத்ரகாளி ஆகிய 9 பேரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே மரகதம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT