Published : 12 Feb 2020 02:42 PM
Last Updated : 12 Feb 2020 02:42 PM
கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்குச் சொந்தமான சீனிவாசபெருமாள் கோயில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த பராங்குசம் என்பவர் தினமும் பூஜைகளைச் செய்து, பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (பிப்.11) மாலை 6 மணியளவில் கோயிலுக்குப் பூஜை செய்ய வந்தபோது, கோயிலுக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோயிலில் பூஜை செய்யப்பட்டு வந்த ஒன்றரை அடி உயரம் உள்ள ஐம்பொன்னாலான பெருமாள் சிலை, பத்மாவதி மற்றும் மற்றொரு தாயார் சிலையும், பீரோவில் இருந்த வெள்ளி ஜடாரி, வெள்ளி பூஜைப் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பராங்குசம், கிராமத்தில் உள்ளவர்களை அழைத்துச் சென்று பார்த்தபோது, கோயிலின் பின்பக்கம் 20 அடி உயரம் கொண்ட மதில் சுவரில் மர்ம நபர்கள் ஏறி வந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும், மேலும், கோயில் உள்ளே மூலவர் கதவில் இருந்த மணிகளில் கிரீசை தடவி சத்தம் வராமல் இருப்பதற்காக வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து பராங்குசம் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT