Published : 10 Feb 2020 08:43 PM
Last Updated : 10 Feb 2020 08:43 PM

வரதட்சணை கொடுமை: ஐபிஎஸ் அதிகாரி மீது காவல் ஆணையரிடம் மனைவி புகார்

வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக ஐபிஎஸ் அதிகாரியான கணவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்தார்.

ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றுபவர் ஆனந்த். இவர் 2016-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஆந்திர மாநில பணிநிலைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆவார். தற்போது தெலங்கானாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றுகிரார். இவரது மனைவி அருணா. சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் வசிக்கிறார்.

இவர் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவரது புகார் மனுவில், தாம் சிவில் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையத்தில் படித்த போது அங்கு உடன் பயின்ற ஆனந்த் என்பவர் அறிமுகமானார்.

இருவரும் காதலித்ததாகவும், ஆனந்த் ஐபிஎஸ் தேர்வில் வென்று 2016-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று ஹைதராபாத்தில் பணி புரிந்ததாகவும், பின்னர் ஆனந்துக்கும் தனக்கும் 2017-ம் ஆண்டு சென்னையில் லீலா பேலஸில் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக தமது வீட்டார் தரப்பில் சுமார் 500 சவரன் நகை மற்றும் சுமார் 4 கோடி ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென ஆனந்தும் அவரது தாய் மலர்க்கொடியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு தம்மை துன்புறுத்தி, வன்கொடுமை செய்து வந்ததாகவும், தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் தனது தந்தை நடத்திவரும் உணவகம் உள்ளிட்ட சொத்துகளைத் தன் பெயருக்கு எழுதி வைக்க ஆனந்த் வற்புறுத்துவதாகவும் அதனால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தேனாம்பேட்டை போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் தாம் உயர்நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கக் கோர உயர் நீதிமன்றம் தனது கணவர் ஆனந்த் மீது ஒரு வாரத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

ஆனாலும் போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். அவர் ஐபிஎஸ் என்பதால் போலீஸார் ஆதரவாக செயல்படுகின்றனர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என அருணா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x