Published : 08 Feb 2020 01:42 PM
Last Updated : 08 Feb 2020 01:42 PM
காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் 88 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப்பின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதன் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.
தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்க டெண்டர் விடப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த தொகையைக்காட்டிலும் பலமடங்கு தொகை கொடுத்து வாக்கி டாக்கி வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் டெண்டரில் ஒரே கம்பெனிக்கு ஒதுக்கப்பட்டு அவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு வாக்கி டாக்கி வாங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட கருவிகளை கொள்முதல் செய்வது காவல்துறையில் தனியாக உள்ள தொழில்நுட்பப்பிரிவு ஆகும். '2017-18-ம் ஆண்டில் காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்திற்கு ரூ. 47.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதை வைத்து 10 ஆயிரம் வாக்கி - டாக்கிகள் வாங்க முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக 83.45 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், 10 ஆயிரம் வாக்கி டாக்கிகளுக்கு பதில் 4,000 வாக்கிடாக்கிகளுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரு வாக்கி - டாக்கி ரூ.47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு வாக்கி டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி காவல்துறை டிஜிபிக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
’டெண்டரில், ஒரே நிறுவனம் மட்டுமே பங்கேற்றால், அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என அரசு விதி உள்ள நிலையில், விதியை மீறி பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது ஏன்? இவ்வளவு பெரிய தொகையைப் போட்டியின்றி ஒரே நிறுவனத்துக்குக் கொடுப்பது குறித்து அரசின் பார்வைக்குக் கொண்டு வராதது ஏன்? தொலைத்தொடர்பு உரிமம் பெறாத நிறுவனத்திடம் வாக்கி டாக்கிக்கான டெண்டர் ஏன் கொடுக்கப்பட்டது? என நிரஞ்சன் மார்டி சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.
அப்போதைய உள்துறைச் செயலர் நிரஞ்சன்மார்டி டிஜிபிக்கு எழுதிய கடிதம்:
தமிழகக் காவல் துறைக்கு வாக்கி-டாக்கி வாங்க விடப்பட்ட டெண்டரில் 11 விதிமீறல்கள் இருக்கின்றன. வாக்கி - டாக்கிக்கு ஜிஎஸ்டி சட்டம் அமலான பிறகு வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அந்தக் கம்பெனிக்கு 28 சதவீதம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க 47 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளபோது, 88 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டது எப்படி? 88 கோடி ரூபாய் டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்துகொண்ட நிலையில், அந்த ஒரே நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது எப்படி? எந்த விதி அதை அனுமதிக்கிறது? என கேள்வி எழுப்பியதாக அப்போது தகவல் வெளியானது.
இதேப்பிரச்சினையை கையில் எடுத்து எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து கண்டனம் தெரிவித்தார். திமுக சார்பில் தலைமைச் செயலர், உள்துறைச் செயலரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் உள்துறைச் செயலர் கடிதத்தை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கை வருமாறு:
"தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 'தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஆளுநர் இதுபோன்று கூறியிருக்கிற நிலையில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குப் பணிகளுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் மிக முக்கியமான தொடர்பு சாதனமாகத் திகழும் 'வாக்கி - டாக்கி' கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
இந்த முறைகேடு குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பது எதிர்க் கட்சிகள் அல்ல, மாநில உள்துறைச் செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி. அவர் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெண்டர் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, அதன் நகலை முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பியிருக்கிறார். இப்படி, மக்களின் பாதுகாப்புக்காக வாங்கப்படும் 'வாக்கி - டாக்கி' கொள்முதல் டெண்டர் முறைகேடுகளுக்குக் காரணமான டி.ஜி.பி-யைப் பாதுகாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி துடிப்பது ஏன்?”
என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அப்போது வெளியிட்ட அறிக்கையில்,
''2017-18-ம் ஆண்டில் காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி 47.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக்கொண்டு 10 ஆயிரம் வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக 83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் வெறும் 4,000 வாக்கி - டாக்கிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வாக்கி - டாக்கி 47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மிகவும் அதிகமாக ஒரு வாக்கி - டாக்கி 2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது.
இதுகுறித்து காவல் துறை தலைமை இயக்குநரிடம் விளக்கம் கேட்டு மாநில உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருப்பதுதான் இதில் ஊழல் நடந்திருப்பதற்கான முதற்கட்ட ஆதாரம் ஆகும். எனவே, காவல் துறைக்கு வாக்கி - டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்"
என்று கோரியிருந்தார்.
அதே போன்று அப்போதைய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் இதே கோரிக்கையை வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் நடைபெற்ற மிகப்பெரும் முறைகேடு குறித்து தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தும் நிலையில், இதற்கான டெண்டர் அனுமதி கொடுக்கப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது, ஒரு வாக்கி டாக்கி நான்கரை மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டது, அதற்கான ஜிஎஸ்டி வரியும் கூடுதலாக கொடுக்கப்பட்டது, இதன் பின்னணியில் இருந்த அதிகாரிகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் வெளிப்பட வாய்ப்புண்டு.
வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு: சென்னையில் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT