Last Updated : 04 Feb, 2020 04:43 PM

 

Published : 04 Feb 2020 04:43 PM
Last Updated : 04 Feb 2020 04:43 PM

பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டிக் கொலை

பெட்ரோல் பங்க்கில் விசாரணை நடத்தும் போலீஸார்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர், நாட்டு வெடிகுண்டு வீசி, வீச்சரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் (55). இவர் தன் மனைவி மீரா (50), மகள் சங்கரி (24) ஆகியோருடன் விழுப்புரம் மகாராஜபுரத்தில் வசித்துவந்தார். சீனுவாசன், அருகே உள்ள கம்பன் நகரில் இயங்கிவரும் பெட்ரோல் பங்க்கில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இன்று (பிப்.4) முற்பகல் 11 மணியளவில் சீனுவாசனும், பெட்ரோல் பங்க் உரிமையாளரான பிரகாஷும் பங்க்கில் உள்ள கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்ணாடி அறையில் இருந்தனர். சற்று நேரத்தில் பிரகாஷ், சீனுவாசனின் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

அப்போது பங்க் ஊழியர் பாலுவிடம் தோளில் டென்னிஸ் ராக்கெட் பேக் மாட்டிய 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், ஓனர் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு பாலு, பங்க்கின் கண்ணாடி அறையைக் காட்டியுள்ளார். அங்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். இதற்கிடையே, கார் ஒன்றுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த பாலுவுக்கு அந்த அறையில் இருந்து வெடிச் சத்தம் கேட்டது. அதை நோக்கி பாலுவும் மற்ற ஊழியர்களும் ஓடினர்.

அப்போது அந்த அறையிலிருந்து வெளியே வந்த இளைஞர் தன் கையில் இருந்த வீச்சரிவாளைக் காட்டி மிரட்டிக்கொண்டே பங்க் வெளியே நின்றிருந்த பைக்கில் புறப்பட்டுச் சென்றார். அவருடன் பைக்கில் 2 பேரும், அருகில் இருந்த காரில் மேலும் சிலரும் தப்பிச் சென்றனர்.

இதற்கிடையே அந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, சீனுவாசன் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி.ஜெயகுமார், டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த சீனுவாசன் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

அந்தக் கண்ணாடி அறையில் மேலும் வெடிக்காத 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும், தடய அறிவியல் நிபுணர் சண்முகம் தலைமையில் அங்கிருந்த தடயங்களைச் சேகரித்தனர்.

இது குறித்து எஸ்.பி.ஜெயகுமார் கூறிய போது, "சிசிடிவி காட்சிகளைப் பார்த்து 5 தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x