Published : 16 Jan 2020 09:47 PM
Last Updated : 16 Jan 2020 09:47 PM

எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு : தென் மாநிலங்களில் புதிய அமைப்பை உருவாக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்

குமரி மாவட்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் கியூ பிராஞ்ச் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் " அல் ஹண்ட் " என்ற அமைப்பை தென் மாநிலங்களில் உருவாக்கி அதன் மூலம் பலர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றது அம்பலமாகியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன்(57) துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணை, சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் அவரை கொலை செய்தது குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், கேரளா கோட்டார் பகுதியைச் சேர்ந்த தவுபீக் என்பது தெரியவந்தது.

இருவரும் தலைமறைவான நிலையில் அவர்களை அண்டை மாநிலங்களிலும் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வில்சனை சுட்டு கொல்வதற்கு துப்பாக்கி வழங்கியதாக இஜாஸ் பாட்ஷா என்ற ஆம்னி பேருந்து ஓட்டுநரை பெங்களூருவில் கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.

அவருக்கும் வில்சன் கொலையாளிகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற ரீதியில் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று அதிகாலை 4.45 மணிக்கு களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர். காவல் நிலையத்தில் 2 மணி நேரம் அவர்களிடம் கியூ பிராஞ்ச், மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.


பின்னர் தக்கலை காவல் நிலையத்திற்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் இரவு எட்டு முப்பது மணிக்கு குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் இருவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு அரசும், போலீஸாரும் கடும் தடையாக இருப்பதாகவும்,

அரசை எதிர்த்து நாங்கள் நடத்தும் யுத்தத்தை, போலீஸார் எளிதாக தகர்த்து வருகின்றனர். இதனால் தமிழகத்திலும், கேரளாவிலும் பதற்றமான சூழலை உருவாக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எங்களுடன் தொடர்பில் உள்ள அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். இதை நிறுத்துவதற்கு அரசுக்கும், போலீஸாருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலே சோதனை சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டு கொன்றோம் என முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்கள் இருவரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், ‘அல் ஹண்ட்’ என்ற அமைப்பை தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்களில் உருவாக்கி அதன் மூலம் பயிற்சி பெற்றதும், இந்த அமைப்பில் இருந்த பலர் இவர்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட பயிற்சி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

நிதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் அனுமதி கேட்ட நிலையில் எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டகொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீஸ் விசாரணைக்கு கொடுக்ககூடாது என குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x