Published : 16 Jan 2020 01:32 PM
Last Updated : 16 Jan 2020 01:32 PM
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'வம்சம்', தேவதை, இளவரசி, பாவ மன்னிப்பு உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. சின்னத்திரையில் நடன இயக்குனராகவும் உள்ளார். 'கல்யாணப் பரிசு' உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர் ரகுநாத். ஏற்கெனவே மணவாழ்க்கை முறிந்த நிலையில், 8 வயதுப் பெண் குழந்தையுடன் இருக்கும் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், ''ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்'' என்று தாக்கப்பட்டு ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார். இதனை அடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.
ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை ஈஸ்வர் கடன் வாங்கியதாகவும், ஈஸ்வரால் கடனை திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த பத்திரத்தை மீட்க முடியாத நிலையும் இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ஈஸ்வர், அவரின் தாயார் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று கூடுவாஞ்சேரியில் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த ஜெயஸ்ரீ உடல்நலம் சரியில்லை என்று கூற, நண்பர்கள் அவரை வீட்டுக்குச் செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால், அவர் தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று அங்கு தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் விடுதி அறைக்குத் திரும்பிய நண்பர்கள், ஜெயஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நீலாங்கரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரின் தாயார் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர், தாயார் சந்திரா மீது புகார் அளித்துள்ளார்.
தனது தற்கொலை முயற்சி குறித்து தனது கைப்பையில் ஜெயஸ்ரீ கடிதம் எழுதி வைத்துள்ளார். அதேபோன்று தங்களது தோழிகளுக்கு வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளார். அதில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மெசேஜ், “ ஹாய் ரேஷ். எனக்கு என்னன்னு தெரியவில்லை மிகுந்த மன அழுத்தமாக உள்ளது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. நான் பயனற்றவளாக உணர்கிறேன் ரேஷ். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் கொடுத்தாய் நீ.
என் அக்கா என்னிடம் எந்த அளவுக்குப் பேசுவாளோ அந்த அளவுக்குப் பேசினாய். மிக்க நன்றி. லவ்யூ மா. முடிஞ்சா அம்மாவைப் பார்த்துக்க. இது குட்பை மெசேஜ் பை” என தனது தோழிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஜெயஸ்ரீயின் தாயார் அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT