Last Updated : 16 Jan, 2020 09:10 AM

 

Published : 16 Jan 2020 09:10 AM
Last Updated : 16 Jan 2020 09:10 AM

தஞ்சை அருகே கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு: பொங்கல் வழிபாட்டுக்குச் செல்லும்போது நிகழ்ந்த சோகம்

விபத்து காரணமாக நொறுங்கியிருக்கும் கார்

தஞ்சாவூர்

தஞ்சை அருகே பொங்கல் சிறப்பு வழிபாட்டுக்குச் செல்லும்போது, கார் மோதியதில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சையை அடுத்த வல்லத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே ஜெபக்கூடம் உள்ளது. இந்த ஜெபக்கூடத்துக்கு தினமும் ஏராளமானோர் ஜெபம் மற்றும் அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். நேற்று (ஜன.15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

கூட்டத்துக்குள் புகுந்த கார்

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பக்தர்களான செல்வி (48), அவரது மகள் கீர்த்தி (22), கவிதா (25), கன்னியம்மாள் உள்ளிட்ட 50 பேர் சாலையோரம் வல்லம்புதூரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, திரும்பி ஜெபக்கூடத்துக்குச் செல்வதற்காக திருச்சி சர்வீஸ் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த சாலையின் எதிரே திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சத்தியநாராயணன் ஒரு காரில் தந்தை ராமச்சந்திரன், தாய் ரேவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கார் நடந்து வந்து கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் அலறியடித்துக் கொண்டு பக்தர்கள் ஓடினர். இருப்பினும் பெங்களூருவைச் சேர்ந்த செல்வி, கவிதா, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் மீது கார் மோதி ஏறி இறங்கியது. மற்ற பக்தர்கள் மீதும் அடுத்தடுத்து மோதி நின்றது.

4 பெண்கள் பலி

இந்தக் கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வி, கவிதா பரிதாபமாக உயிரிழந்தனர். கீர்த்தி, ஜோதி, கன்னியம்மாள், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த வியாபாரி பாலகிருஷ்ணன் மற்றும் காரை ஓட்டி வந்த சத்தியநாராயணா, அவரது பெற்றோர் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி 4 பெண்கள் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x