Published : 24 Dec 2019 07:39 PM
Last Updated : 24 Dec 2019 07:39 PM
குழந்தைகள் ஆபாசப் படம் தொடர்பாக 30 ஐபி முகவரியை வைத்து சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கும் முயற்சியில் சென்னை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இண்டெர்நெட் கஃபேக்களையும் போலீஸார் சோதனையிட்டுள்ளனர்.
உலகின் கருப்பு வியாபாரமான குழந்தைகள் குறித்த ஆபாசப் படங்களைப் பதிவேற்றுதல், பகிர்தல், அப்லோடு செய்தல் போன்ற குற்றங்கள் இந்தியாவில் அதிகமாக நடப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் நடப்பதாகவும் அமெரிக்க உளவுப் பிரிவு கண்டுபிடித்து அதற்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறைக்கு அனுப்பியது. அந்த ஐபி முகவரிப் பட்டியலை மாவட்ட வாரியாகப் பிரித்து, சைபர் பிரிவு போலீஸ் துணையுடன் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கும் முயற்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு ஈடுபட்டு வருகிறது.
குழந்தைகள் ஆபாசப் படம் தொடர்பாக சென்னையில் உள்ள இண்டர்நெட் மையங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 30 பேரின் ஐபி முகவரி சென்னை போலீஸாருக்கு அனுப்பப்பட்டு அவர்களைக் கண்டறிந்து பிடிக்கும் முயற்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு[ப் பிரிவு போலீஸார், குற்றச் செயலில் ஈடுபட்டது யார், யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் ஆபாசப் படம் தொடர்பாக தனியார் இண்டர்நெட் மையங்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்புக்கான வாட்ஸ் அப் எண் மூலம் புகார்கள் வருவது அதிகரித்து வருகிறது.
சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண் 7530001100 -க்கு இதுவரை 25 புகார்கள் வந்துள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பு கேட்டு போலீஸார் அறிமுகப்படுத்திய இ-மெயிலுக்கு 10 இ- மெயில் புகார்கள் வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT