Published : 20 Dec 2019 08:35 PM
Last Updated : 20 Dec 2019 08:35 PM
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு சென்ற மின்சார ரயிலில் மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயிலில் பெண் டிக்கெட் பரிசோதகரிடம் 4 சவரன் செயினைப்பறித்து சென்ற நபரை போலீஸார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து தேடிவருகின்றனர்.
இன்று காலை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் நுங்கம்பாக்கம் தாண்டிச் சென்றது. ரயிலில் பயணிகளிடம் பெண் டிக்கெட் பரிசோதகர் ரெஜினி டிக்கெட்டுகளை கேட்டு பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.
பீக் அவர் என்பதால் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. நுங்கம்பாக்கம் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்ட ரயில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெஜினி, முதல் வகுப்பு பெட்டியில் சோதனையில் ஈடுபட்டார். பின்னர் ரயில் புறப்பட தயாரானதும் அடுத்தப்பெட்டியில் ஏறி நின்றார்.
ரயில் புறப்பட்டு லேசாக வேகமெடுத்தது. அப்போது திடீரென கூட்டத்திலிருந்த ஒரு நபர் ரெஜினியின் கழுத்திலிருந்த 4 சவரன் தாலிச்சங்கிலியை சட்டென்று அறுத்துக்கொண்டு ஓடும் ரயிலிலிருந்து லாவகமாக இறங்கி ஓடினார்.
செயின் பறிக்கப்பட்ட வேகத்தில் ரெஜினி ரயிலிலிருந்து கீழே விழவிருந்தவர் கம்பியைப் பிடித்துக்கொண்டதால் உயிர் தப்பினார். கம்பியை பிடித்து சுதாரித்துக்கொண்ட ரெஜினி அவனை பிடியுங்கள் என கூச்சலிட்டார். ஆனால் ரயிலின் ஓட்டத்தில் யாரும் அந்த நபர் இறங்கி ஓடியதை கண்டுக்கொள்ளவில்லை. மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் நின்றதும் ரெஜினி இறங்கிச் சென்று போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் கோடம்பாக்கம் ரயில் நிலையம் எல்லை உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாம்பலம் போலீஸார் ஸ்டேஷன் மற்றும் வெளியில் உள்ள நடைபாதை, சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
டிக்கெட் பரிசோதகரிடமே திருடன் கைவரிசை காட்டியது ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் இதேபோன்று ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக பயணியின் கைப்பையை பறித்துச் சென்ற நபரை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT