Published : 19 Dec 2019 02:34 PM
Last Updated : 19 Dec 2019 02:34 PM

ஆபாசப் படம் பதிவேற்றம் செய்த சென்னை நபர்கள் 30 பேர்; நடவடிக்கைக்கு அனுப்பியுள்ளேன்: கூடுதல் டிஜிபி ரவி பேச்சு

சென்னை கோடம்பாக்கம் தனியார் கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடுதல் டிஜிபி ரவி பெண்களைத் தைரியமாக இருக்கும்படி அறிவுறுத்தினார். உங்களிடம் தவறாக நடக்க முயல்பவரிடம், 'கூடுதல் டிஜிபி ரவி என் சகோதரன்’ என்று கூறுங்கள் என்று பேசினார்.

காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்து தினமும் கல்லூரி மாணவ, மாணவியரிடையே கொண்டு செல்கிறார். தற்போது இந்த முயற்சியில் கூடுதல் டிஜிபி ரவியும் இணைந்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் காவலன் SOS பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஏடிஜிபி ரவி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் மாணவிகளிடம் பேசியதாவது.

''7.3 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் காவலன் செயலியை 10 லட்சம் பேர்தான் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிலும் 4 லட்சம் பேர்தான் பதிவு செய்துள்ளனர். விசாரித்தபோது செயலியைப் பயன்படுத்துவது எளிதாக இல்லை என்று குறிப்பிட்டனர். செயலியில் ஒரு வாரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். போன் நம்பர் மட்டும் பதிவு செய்யப்படும்.

உலகில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்கள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராகத்தான் நடைபெறுகின்றன. மற்ற குற்றங்கள் குறைவாகவே இருக்கின்றன. அதைத் தடுக்கும் நோக்கிலே தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலே தமிழகத்தில்தான் பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் குறைவாக உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஒரு குற்றமும் நடைபெறாத குற்றமில்லா நிலையை உருவாக்குவதே நமது நோக்கம்.

குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்பு அதில் ஈடுபட்ட 30 பேர் பட்டியலை சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பி விட்டுத்தான் வந்திருக்கிறேன்.

படிக்கும் மாணவர்கள் ஆபாசப் படம் பார்க்காதீர்கள். உங்கள் கவனம் சிதறும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வளந்துவரும் தொழில்நுட்ப வசதிகளில் தீயவைகளுக்கு நாம் இரையாகி வருகிறோம்.

இணைய ஒழுக்கமுறையை நாம் கையாளுதல் வேண்டும். அதற்காக இணையத்தை ஒழுக்கமாகப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை விரைவில் ஏற்படுத்த உள்ளோம்.

பெண்கள் மீது கை வைப்பதும் போலீஸ் மீது கை வைப்பதும் ஒன்றுதான். அனைத்துப் பெண்களுக்கும் ஏடிஜிபி ரவி என்ற அண்ணன் இருக்கிறான் என்று சொல்லுங்கள். உங்கள் சகோதரன் ஒரு காவல்துறை அதிகாரி என உங்களிடம் தவறாக நடந்து கொள்பவரிடம் சொல்லுங்கள்.

பெண்கள் ஆடை மீது குறை சொல்பவன் தவறானவன். ஆடை என்பது அவர்கள் சொந்த விருப்பம், சுதந்திரம். உங்களிடம் தவறாக நடந்துகொள்பவரை அடிக்கவும், உதைக்கவும் உங்களுக்குச் சட்டத்தில் உரிமை உண்டு. உங்களை யாரேனும் மானபங்கம் செய்ய வந்தால் அவர்களை நீங்கள் சுட்டுக் கொன்றாலும் குற்றமாகாது.

ஆண்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் உடல்வலு இருக்கிறது. ரவுத்திரம் பழகுங்கள். யாராவது சீண்டினால் உதையுங்கள். குத்துங்கள், தூக்கியெறிங்கள். எவனாக இருந்தாலும் தாக்குங்கள் உங்கள் பாதுகாப்பே முக்கியம்”.

இவ்வாறு கூடுதல் டிஜிபி ரவி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x