Published : 19 Dec 2019 12:37 PM
Last Updated : 19 Dec 2019 12:37 PM
விராலிமலையில் மனைவியை எரித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவர் விருதுநகரில் இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் பாண்டியன் நகர் காந்திர நகரைச் சேர்ந்தவர் அழகர் (49). கட்டிடத் தொழிலாளி. இவரது மகள் பானுரேகா (20). விருதுநகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3ம் ஆண்டு படித்து வந்தார்.
அழகரின் தங்கை ஜானகி என்பவரது மகன் ராஜ்குமார் (26) என்பவருக்கும் பானுரேகாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமார் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பானுரேகா தனது தந்தை வீட்டிலிருந்து கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார்.
குடும்ப வாழ்க்கையில் ராஜ்குமாருக்கும் பானுரேகாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற பானுரேகா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கல்லூரியில் படிக்கும் பானுரேகாவின் தோழியிடம் விசாரித்தபோது தனது கணவர் ஊருக்கு வந்துள்ளதாகவும், அவரைப் பார்க்க விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்வதாகக் கூறிச்சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து பானுரேகாவைக் காணவில்லையென பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அழகர் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து பானுரேகாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் திருச்சி அருகே உள்ள விராலிமலையில் காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொ லைசெய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விராலிமலை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். தமிழகத்தில் அண்மையில் காணாமல் போனவர்களை பட்டியலை வைத்து சோதனையிட்டபோது எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பானுரேகா என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, ராஜ்குமாரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி பானுரேகாவை விராலிமலைக்கு அழைத்துச்சென்று கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், இன்று விருதுநகர் வந்த விராலிமலை போலீஸாரிடம் ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT