Published : 16 Dec 2019 02:44 PM
Last Updated : 16 Dec 2019 02:44 PM
சென்னையில் 5 வயது மகள், 2 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவன் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் பிழைத்தார்.
சென்னை திரிசூலம் அம்மன் நகர் 2-வது தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (28). இவரது மனைவி சுதா (25). இவர்களுக்கு சிவானி (5) தீபன் (2) என்கிற இரு குழந்தைகள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுதா கணவரிடம் சொல்லிவிட்டு தனது மகள், மகனுடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மாலை மீண்டும் தனது தாய் வீட்டிலிருந்து திரிசூலத்தில் உள்ள தனது வீட்டிற்கு மகள் மற்றும் மகனுடன் சுதா திரும்பிக் கொண்டிருந்தார்.
மாலை சுமார் 5.30 மணி அளவில் மேடவாக்கம் பிரதான சாலை ரவீந்திர பாரதி பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். பாலம் தொடர்பான பணி நடப்பதால் அந்தச் சாலை குறுகி, பள்ளம் மேடு, கற்களுடன் குவியலாகக் காணப்பட்டது. தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுதாவின் பின் பக்கம், தாம்பரத்திலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் மாநகரப் போக்குவரத்து பேருந்து ( தடம் எண் V 51) வந்து கொண்டிருந்தது.
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் தங்கய்யா (34) பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் சென்ற சுதாவின் இருசக்கர வாகனம் இடறி சாலையில் விழுந்தது. இதில் சுதாவும், அவரது மகள் சிவானியும் சாலையின் வலதுபுறமும், இருசக்கர வாகனமும் சிறுவன் தீபனும் இடதுபுறமும் விழுந்தனர். திடீரென சாலையில் அவர்கள் விழுந்ததைக் கவனிக்காமல் வேகமாக பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர்கள் தலை மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே சுதாவும் அவரது மகள் சிவானியும் தலை நசுங்கி உயிரிழந்தனர். சாலையின் இடதுபக்கம் விழுந்ததால் நல்வாய்ப்பாக சிறுவன் தீபன் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார். விபத்தைப் பார்த்த பொதுமக்கள் இவ்வளவு குறுகிய சாலையில் இப்படியா வேகமாக வருவீர்கள் என பேருந்தின் ஓட்டுநர் , நடத்துநரைத் தாக்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் ஓட்டுநர், நடத்துநரை மீட்டனர்.
உயிரிழந்த இருவர் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் தங்கய்யா கைது செய்யப்பட்டார்.
இப்பகுதியில் சாலை குறுகியதாக உள்ளது. இருபுறமும் வாகனங்கள் செல்ல இந்த குறுகிய சாலையைப் பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்து நேர்கிறது. இந்த விபத்தில்கூட பேருந்து ஓட்டுநர் முன்னால் குழந்தைகளுடன் செல்லும் பெண்மணியின் நிலையைப் பார்த்து சற்று மெதுவாகச் சென்றிருந்தால் அவர்கள் கீழே விழுந்தபோதும் பேருந்து மோதாமல் தப்பியிருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
குறுகிய பராமரிப்பில்லாத சாலையில் கனரக வாகனங்களுடன் போட்டி போட்டு, ஹெல்மட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது இந்தச் சாலையில் அதிகம் நடக்கிறது எனக் குற்றம் சாட்டிய பொதுமக்கள் போக்குவரத்து போலீஸார் இப்பகுதியில் இருப்பதே இல்லை எனப் புகார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT